இனம் சார்ந்த பிரதிநிதித்துவத்தை தமிழர்கள் தக்க வைக்க வேண்டும்! – தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை.

“வன்னியில் முஸ்லிம்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பார்களா? தமிழ் மக்கள் தமது இனம் சார்ந்த பிரதிநிதித்துவத்தைத் தக்க வைக்கச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.”

இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவர் க.சபேசன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“வன்னியில் தமிழ் மக்கள் இன்று பாரிய ஒரு பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக மக்களுக்காகச் செயற்படுகின்றோம் என்று தெரிவிக்கும் எந்த அரசியல்வாதிகளும் பேச முன்வருவதில்லை.

குறிப்பாக வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 8 – 12 வீத முஸ்லிம்களும், 8 வீதமான சிங்களவர்களும் உள்ளனர். 80 வீதமானவர்கள் தமிழர்கள். இந்த நிலைமையில் இங்கு போட்டியிடுகின்ற ஐக்கிய மக்கள் சக்தி 2, 3 ஆசனங்களைப் பெறும் என்று பலரால் தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பிரதான கட்சியில் போட்டியிடும் ரிஷாத் பதியுதீன் தனது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிடுகின்றார். பல முஸ்லிம்களும் போட்டியிடுகின்றனர். அதுபோல் தேசிய மக்கள் சக்தியிலும் முஸ்லிம்கள் போட்டியிடுகின்றனர்.

இங்கு குறைந்தளவிலான வாக்குகளைக் கொண்டுள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு 2 ஆசனங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே, தமிழ் மக்கள் மிக அவதானமாக வாக்களிக்க வேண்டும். காலம் காலமாக ஏமாறும் ஒரு தரப்பாக நாம் இருக்கக் கூடாது.

எந்தவொரு காலத்திலும் முஸ்லிம் மக்கள், தமிழ் மக்களுக்கு வாக்களித்த வரலாறு இல்லை. அதுபோல் சிங்கள மக்கள் தமிழர்களுக்கு வாக்களித்த வரலாறும் இல்லை. ஆனால், தமிழ் மக்கள் முஸ்லிம்களுக்கும், சிங்கள மக்களுக்கும் வாக்களிப்பார்கள். இந்த நிலையை மக்கள் மாற்ற வேண்டும். அவ்வாறு வாக்களித்தால் தமிழ்ப் பிரதிநிதித்துவம் குறைந்து 3 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் வாய்ப்பு உள்ளது.

அத்துடன், எமது தமிழ்ப் பெண்கள் இன்று பொருளாதாரக் கஷ்டத்தால் வீதிகளில் நின்று சுவரொட்டிகளை ஒட்டுகின்றனர். ஒரு முஸ்லிம் பெண்மணி வீதியில் நின்று சுவரொட்டி ஒட்டுவதை யாரும் பார்த்திருக்கிறீர்களா?. இது மிகவும் ஒரு துன்பியலான நிகழ்வு. எமது மக்களுக்குச் சரியான ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமையே அதற்கான காரணம். எனவே, இம்முறை தேர்தலில் எமது மக்கள் சிந்தித்துத் தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களிக்கவேண்டும்.

எமது கட்சியான தமிழர் விடுதலை கூட்டணி முரண்பாடுகள் எதுவும் இல்லாமல் உதயசூரியன் என்ற சின்னத்துடன் தொடர்ந்து பயணிக்கின்றது. எனவே, ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்ட எமது சின்னத்துக்கு மக்கள் வாக்களியுங்கள். எமது கட்சியில் இணையுமாறு பலருக்கு நாம் அழைப்பு விடுத்தோம். யாரும் வரவில்லை. நாங்கள் பதவிகளைச் சுழற்சி முறையில் வழங்குவதற்குக் கூட தயாராக இருக்கின்றோம். இன்று பல கட்சிகளுக்குத் தலைவர்கள் யார் என்பது தெரியது. ஆனால், நாங்கள் ஒற்றுமைக்காகச் செயற்படுகின்றோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.