தமிழ் மக்களின் வாக்குகளை நுட்பமாக வேட்டையாடும் முஸ்லிம் தலைமைகள்! – வன்னி மாவட்ட வேட்பாளர் எமில்காந்தன் எச்சரிக்கை.
“தமிழ் வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் வேட்பாளர்களை உள்நுழைத்துத் தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாட முஸ்லிம் அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளனர். எனவே, தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.”
இவ்வாறு வன்னி தேர்தல் மாவட்டத்தில் கோடரி சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் எமில்காந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வன்னியில் கடுமையான ஒரு போட்டி நிலவுகின்ற இந்த நேரத்தில் தமிழ் மக்களிடம் நாங்கள் அன்பான ஒரு வேண்டுகோளை விடுக்கின்றோம். கடந்த 15 வருட கால அரசியலில் தமிழர்களின் உரிமைக்காக அரசியல் செய்து வந்த கட்சிகள் தங்களது தனிப்பட்ட அதிகாரத்திற்கும் பதவிகளுக்கும் போட்டியிட்டு தமிழ் மக்களைத் தலைமையற்ற சமூகமாக நடுத்தெருவில் விட்டுச் சென்றுள்ளனர்.
அந்த அதிகாரப் போட்டியில் இரண்டாக பிரிந்து இரண்டுக்கும் தலைமை இல்லாமல் மக்களை பிழையாக வழிநடத்தி விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
விசேடமாக வன்னி மாவட்டத்தில் இந்த 15 வருட அரசியலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் களநிலவரங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நிலைமை இருந்துள்ளதைப் பார்க்கின்றோம்.
தமிழ் மக்களை விட குறைவான வாக்குகளைக் கொண்டுள்ள முஸ்லிம்கள் தமது அரசியல் தேவையை தமிழ் மக்களின் மீது பயணம் செய்தே பெற்றுக்கொள்கின்றனர். இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் புதிய வியூகங்களை அமைத்து தமிழ் வேட்பாளர்களை உள்வாங்கி தமது வாக்குவேட்டையை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் வேட்பாளர்களை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் வேட்பாளர்களை உள்நுழைந்து தமிழ் வாக்குகளைப் பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தமிழர்கள் எந்த வகையில் வாக்களித்தாலும் முஸ்லிம்கள் தமது பிரதிநிதிகளை நாடாளுமன்றம் அனுப்பும் நோக்குடன் கட்சிதமாக அவர்கள் செயலாற்றி வருகின்றனர்.
எனவே, தமிழ் மக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகின்றீர்கள்? அது எத்தகைய வேட்பாளர்களைக் கொண்டுள்ளது? அதில் தமிழர்கள் முற்றுமுழுதாக உள்ளார்களா? அவர்கள் புதிய முகங்களா? அனுபவம், ஆற்றல் உள்ளவர்களா? என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
அவர்களது கொள்கையும் சித்தாந்தமும் மிக முக்கியமானது. சிலர் பழைய சித்தாந்தங்களுடன் புதிய முகங்களைக் காட்டி வாக்குக் கேட்டு வந்துள்ளனர்.
வன்னித் தேர்தல் களம் முக்கியமானது. இங்கு அனைத்துத் துறைகளிலும் தமிழ் மக்கள் பலங்குன்றியே உள்ளனர். வவுனியா நகரத்தின் பொருளாதாரக் கட்டமைப்பும் ஆதிக்கமும் முஸ்லிம்களின் கைகளில் உள்ளது. அதற்கேற்றவாறாக முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது மக்களுக்குத் தேவையானதைச் செய்து கொடுத்துள்ளனர்.
கடந்த காலத்தில் இந்தப் பகுதியை சேர்ந்த இரண்டு முஸ்லிம்கள் அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். அவர்களுக்குத் தமிழ் மக்கள் ஏதோவொரு விதத்தில் வாக்களித்ததை அந்தத் தரப்புகள் சாதகமாகப் பயன்படுத்தியதன் விளைவே அது.
இந்த விளைவை 15 வருடங்களாகக் கண்டு கொண்ட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு வன்னி மக்கள் மீது அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை. இம்முறையும் இதே நிலைப்பாட்டை முஸ்லிம் அரசியல்வாதிகள் கையில் எடுத்து இரண்டுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நுட்பமான முறையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.
கோடரிச் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடும் நாங்கள் சமூக அக்கறை கொண்டவர்களை, வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம். எனவே, தலைமைத்துவம் இல்லாத இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் நீங்கள் வாக்களிக்கக் கூடாது. முஸ்லிம் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கட்சிகளையும் புறந்தள்ளி எமது கோடரிச் சின்னத்துக்கு வாக்களித்து வன்னி மண்ணைப் பாதுகாக்குமாறு உங்களிடம் வேண்டி நிற்கின்றோம்.” – என்றார்.