ராஜபக்சக்களின் நகர்வைப் பொறுத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம். சம்பந்தன்
ராஜபக்சக்களின் நகர்வைப் பொறுத்தே
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்!
தலைவர் சம்பந்தன் திட்டவட்டம்
“இலங்கையின் ஜனநாயகத்துக்குச் சாவுமணியடிக்கும் வகையில் – சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டும் நிறைவேற்ற ராஜபக்ச அரசு திட்டமிருந்த அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, இந்தத் தீர்ப்பு தொடர்பில் ராஜபக்ச அரசு எடுக்கவுள்ள தீர்மானத்தையடுத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிப்போம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
20ஆவது திருத்தச் சட்டவரைவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராகப் பல தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் எனது மனுவையும் தாக்கல் செய்திருந்தேன்.
மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர். எனது சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார்.
இந்தநிலையில், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தமது தீர்ப்பை சபாநாயகருக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பிவைத்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான மனுவில் நாம் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் முக்கியமான பல விடயங்களை உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளது. அதற்கமைய 4 சரத்துகளுக்கு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்கள் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற உத்தரவை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதிக்குச் சட்ட விலக்களிப்பு வழங்கும் சரத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் உள்ளிட்ட நான்கு சரத்துக்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் கவனத்தில் கொள்ளப்படும் என நாம் நம்புகின்றோம்.
எனவே, இந்த முக்கிய தீர்ப்பு தொடர்பில் ராஜபக்ச அரசு எடுக்கவுள்ள தீர்மானத்தையடுத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிப்போம். அதுவரைக்கும் எமது நிலைப்பாட்டை அறிவிக்க முடியாது” – என்றார்.
இதேவேளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைவு தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் சார்பாக சட்டத்தரணிகளான சுரேன் பெர்ணான்டோ, எம்.ஏ.சுமந்திரன், க.கனக ஈஸ்வரன், சூல பண்டாரா, நாகானந்த கொடித்துவக்கு, ஜெப்ரி அழகரட்ணம், புளஸ்தி ஹெவாமன்னே, சிறிலால் லக்திலக, விரான் கொரிய, கெஹான் குணதிலக, கிறிஸ்மால் வர்ணசூரிய, எர்மிஷா திகல், நுவான் போகவே, பார்மன் காசிம், பூபதி கஹதுடுவ, நிஸாம் காரியப்பர், தர்சன வெரதுவே, லக்ஸ்மன் ஜெயக்குமார், ஏ.எம்.பாயிஸ், நிரான் அங்கிரல், ரொனால்ட் பெரேரா, எராஜ் டி.சில்வா, பாயிஸ் முஸ்தபா, ரவூப் ஹக்கீம், சாந்த ஜெயவர்தன, சஞ்சய வில்சன், சஞ்சீவ ஜெயவர்த்தன ஆகியோர் முன்னிலையாகி வாதங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.