கடந்த அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள் மீறப்பட்டால் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும்… – ஜனாதிபதி
எரிபொருள் மற்றும் உள்நாட்டு எரிவாயுவை அடுத்த வருடம் வரை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு கடந்த அரசாங்கத்தினால் ஒப்பந்தம் செய்யப்பட்ட டெண்டர்கள் இடைநிறுத்தப்படாமல் தொடர வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
உள்நாட்டு எரிவாயு விநியோகம் தொடர்பில் கடந்த அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனத்துடன் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்தால் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அந்த ஒப்பந்தங்களில் இருந்து உடனடியாக விலகுவது சாத்தியமில்லை என்றும், 2025 ஜனவரிக்குப் பிறகு அந்த ஒப்பந்தங்களில் இருந்து விலக அரசு முயற்சிக்கும் என்றும் அவர் கூறினார்.
எரிபொருள் விற்பனை தொடர்பான தற்போதைய விலைச்சூத்திரத்தில் இருந்து புதிய அரசாங்கம் விலக எதிர்பார்த்துள்ளதாகவும், அதன் பின்னர் சில எரிபொருள் விநியோக நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் எனவும் சில நிறுவனங்கள் அரசியல் நோக்கங்களுக்காக தங்கியிருக்கலாம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விற்பனையில் இருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும், எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் தலையீடு இருக்க வேண்டுமென நம்புவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.