சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி சட்டங்களை மீறி உள்ளதாக விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி சட்டங்களை மீறி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களை மக்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதாக, 2022ல் புகார்கள் வந்தன.
இரு நிறுவனங்களும் குறிப்பிட்ட சில உணவகங்களுக்கு சாதகமாக செயல்படுவதாக, தேசிய ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சார்பில் புகாரளிக்கப்பட்டது. அதன்படி, காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியா (CCI) எனப்படும் நிறுவனங்களுக்கு இடையே சமமான போட்டியை உறுதி செய்யும் ஆணையம் விசாரணையை தொடங்கியது.
அதில், ஸ்விக்கி நிறுவனம் தங்களுடைய தளத்தில் மட்டும் பட்டியலிட ஒப்புக்கொள்ளும் உணவகங்களுக்கு அதிக ஆர்டர்களை வழங்குவதாக தெரியவந்துள்ளது. இரு நிறுவனங்களும், குறிப்பிட்ட உணவகங்களுடன் பிரத்யேக ஒப்பந்தம் செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.
இத்தகைய நடைமுறை, சமமான போட்டி சந்தையில் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளுக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் ஸ்விக்கியின் உணவு ஆர்டர் மதிப்பு 3.3 பில்லியன் டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது சொமேட்டோவை விட 25 சதவீதமாக குறைவு. இரு உணவு விநியோக நிறுவனங்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.