“மருமகளை டிவி பார்க்க அனுமதிக்காதது கொடுமை அல்ல..!” – மும்பை உயர் நீதிமன்றம்
மருமகளை டிவி பார்க்கவும், அக்கம் பக்கத்தினரை சந்திக்கவும், கோயிலுக்கு தனியாக செல்லவும் அனுமதிக்காதது கொடுமை அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், வாரங்கானையைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2002-ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடந்த நிலையில், பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய மகள், 2 மாதங்கள் கழித்து 2003-ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.
மகள் தயாரித்த உணவைக் கேலி செய்தது, டிவி பார்க்க அனுமதிக்காதது, அக்கம்பக்கத்தினரை சந்திக்க விடாதது, கோயிலுக்கு தனியாக செல்ல விடாதது, நள்ளிரவில் தண்ணீர் எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது என கணவர் வீட்டார் கடுமை காட்டி தற்கொலைக்கு தூண்டிவிட்டதாக பெண்ணின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கணவர் மற்றும் அவரது பெற்றோரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. இதையடுத்து, கணவர் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி அபய் வாக்வாஸ் விசாரித்தார்.
மகளின் பெற்றோர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளில் என்ன வகையான கேலி செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை எனக் கூறிய நீதிபதி, அண்டை வீட்டாருடன் பழகுவதை தடுப்பதையும் துன்புறுத்தலாகக் கூற முடியாது என்று குறிப்பிட்டார்.
தாய் வீட்டுக்கு திரும்பிய 2 மாதங்களுக்கு பின்னரே மகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, மேல்முறையீடு செய்தவர்களின் தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.