கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்.
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறு கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.
இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் குறித்த கடிதமானது கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் செய்தி அறிக்கையிடலிற்காக சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்ற சூழலில் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினையும் சுய கௌரவத்தினையும் பெற்றுத்தருமாறு கோரியே மேற்படி கடிதம் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் எந்த பகுதியிலும் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தமது கடமைகளை ஆற்றக்கூடிய சூழலை ஏற்படுத்தி தருமாறும் அவர்களுக்கு ஏற்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தல்களிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக செயலாற்றுவதற்கான சூழல் ஒன்று அமைய நடவடிக்கை எடுக்குமாறும்; கோரிக்கையினை முன்வைத்து கடிதத்தினை கையளித்துள்ளனர்.
இந் நிகழ்வின் போது தம்மிடம் வழங்கப்பட்ட கடிதத்தினை குறித்த காலப்பகுதிக்குள் விரைந்து ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பிவைப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.