லெபனான் பேஜர் தாக்குதல்களுக்கு அனுமதி கொடுத்ததாக ஒப்புக்கொண்ட நெட்டன்யாகு
கடந்த செப்டம்பர் மாதம், ஹிஸ்புல்லா அமைப்பு பயன்படுத்திய பேஜர் கருவிகளின் மூலம் லெபனானில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குத் தாம் ஒப்புதல் அளித்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பென்சமின் நெட்டன்யாகு ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 10) தெரிவித்தார்.
அந்தத் தாக்குதல்களில் தாங்கள் ஈடுபட்டதை இஸ்ரேல் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
அந்தத் தாக்குதல்களுக்குத் தங்களின் பரம எதிரியான இஸ்ரேல்தான் காரணம் என்று ஹிஸ்புல்லா முன்னதாகக் குற்றஞ்சாட்டியது. ஈரான் ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லாவுக்கு அந்தத் தாக்குதல்கள் பெரும் பின்னடைவாக அமைந்தது.
அதற்குப் பதிலடி தரப்படும் என்றும் ஹிஸ்புல்லா உறுதியளித்தது.
“லெபனானின் பேஜர் தாக்குதலை நடத்துவதற்குத் தாம் அனமதி அளித்ததை நெட்டன்யாகு நவம்பர் 10ஆம் தேதியன்று உறுதிப்படுத்தினார்,” என்று திரு நெட்டன்யாகுவின் பேச்சாளர் ஒமர் டொஸ்திரி ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் மாத நடுப்பகுதியில் தொடர்ந்து இரு நாள்களாக ஹிஸ்புல்லா அமைப்புகளுடன் செயல்பட்ட உளவாளிகள் அந்த அமைப்பு பயன்படுத்திய கைப்பிடி சாதனங்களை வெடிக்கச் செய்தனர். பேரங்காடிகள், சாலைகள், இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் கருவிகள் வெடித்தன.
அந்தத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 40 பேர் கொல்லப்பட்டனர், சுமார் 3,000 பேர் காயமுற்றனர்.