கனடிய இந்து கோயில் தாக்குதல்: காலிஸ்தான் தலைவர் கைது
கனடாவில் உள்ள இந்துக் கோயில் ஒன்றில் அண்மையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் வந்திருந்தோரைத் தாக்கினர்.
அந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்த காலிஸ்தானிய ஆதரவாளர் இந்தர்ஜித் கோசல் கைது செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமையன்று (நவம்பர் 9) வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்களில் இச்செய்தி வெளியானது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 4) பிரேம்ப்டன் நகரில் உள்ள இந்துக் கோயில் ஒன்றில் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது அங்கு வந்திருந்தோர் தாக்கப்பட்டனர். பிரேம்ப்டன், டொரொன்டோ நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.
அதன் தொடர்பில் 35 வயது இந்தர்ஜித் கோசல் கைது செய்யப்பட்டதாகவும் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 8) அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். கோசல், பிரேம்ப்டன் நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட கோசல், வேறொரு தேதியில் பிரேம்ப்டன் நீதிமன்றம் ஒன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார்.
பிரேம்ப்டன் நகரில் கோர் ரோட்டில் கோசல் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் அந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கொடிகளையும் கம்புகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தினர்.
அச்சம்பவம் பதிவான காணொளியில் காணப்படும் பல்வேறு குற்றச் செயல்கள் குறித்து காவல்துறை விசாரணை நடத்தத் தொடங்கியது. மற்ற சந்தேகப் பேர்வழிகளை அடையாளம் காண காவல்துறை தொடர்ந்து காணொளி ஆதாரங்களை ஆராய்ந்துவருகிறது.
கைது செய்யப்பட்ட கோசல், கனடாவில் செயல்படும் காலிஸ்தானிய இயக்கத்தின் முக்கியத் தலைவராக இருக்கிறார். அப்பொறுப்பில் இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கோசல் அவ்விடத்தை நிரப்பினார்.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார், சென்ற ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதியன்று சரே நகரில் கொல்லப்பட்டார். அச்சம்பவத்தையடுத்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டன.
இருநாட்டு உறவு தொடர்ந்து மோசமடைந்து வந்துள்ளது.