தீர்வு குறித்து யாழில் அநுர மூச்சே விடவில்லை – காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் பற்றியும் வாயே திறக்கவில்லை.
“வடக்கு மக்களே உங்கள் காணிகளைப் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுப்போம்.”
இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான பிரதான பிரசாரக் கூட்டம் பாஷையூர் புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு முன்பாக ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதன்போது உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஆனால், தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தும், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் பற்றியும் ஜனாதிபதி தனது உரையில் எதுவும் சொல்லவில்லை.
அவர் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காகத் தற்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்தாரா? முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ யாழ்ப்பாணம் வந்தாரா? நாம் வந்தோம். தேர்தலை வெற்றிகொள்ள மட்டும் எமக்கு யாழ்ப்பாணம் தேவை இல்லை. யுத்தம் இல்லாத நாட்டை உருவாக்கவும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பவும் யாழ்ப்பாணம் தேவை.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எனக்கு 27 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது அது மிகவும் சிறியது. ஆனாலும், அது எமக்கு மிகப்பெரியது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏனையவர்களில் இருவர் வெல்வார்கள் என்றே வடக்கில் சொல்லப்பட்டது. ஊடகங்களும் அதைத்தான் சொன்னது. நாம் வெல்வோம் என்ற செய்தி வடக்கில் தமிழ் மக்களிடம் சரியாகச் செல்லவில்லை.
தெற்கில் நாம் வேலை செய்தளவுக்கு வடக்கில் வேலை செய்யவில்லை என்பதும் உண்மைதான்.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் எமது காரியாலயம் நிரம்பி வழியத் தொடங்கியது. இதன் பலனாக இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் உள்ள கட்சிகளின் தயவுடன் ஏனைய கட்சிகள் வடக்குக்கு வந்தன. அவர்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்களையே ஒன்றிணைத்தார்கள். மக்களை ஒன்றிணைக்கவில்லை. தேசிய மக்கள் சக்தியில் நாங்கள் வடக்கில் தலைவர்களுடன் பேசியதுடன் மக்களுடன் இணைந்து அரசியல் செய்கின்றோம்.
தெற்குக்கு எதிராக வடக்கிலும், வடக்குக்கு எதிராக தெற்கிலும் செயற்பட்டு எவ்வாறு ஒற்றுமையைக் காட்டுவது? நாம் ஒரு அரசியல் கட்சியின் கீழ் ஒன்றிணையத் தயார் என்பதை இந்த மக்கள் கூட்டம் காட்டுகின்றது.
நான் சொல்லும் விடயங்கள் உங்களுக்குத் தேவை இல்லையா? தேவை தானே! பழைய அரசியலைக் கைவிடுவோம். புதிய அரசியலுக்கு வருவோம். சிங்களம், தமிழ், முஸ்லிம் பேதமின்றி பிரியாது சண்டை பிடிக்காது வாழ்வோம். அது தோல்வியடைந்த பழைய அரசியல். நவம்பர் 14 ஆம் திகதி நாம் பங்களித்து சக்தி வாய்ந்த அரசை முன்கொண்டு செல்வோம்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பலரும் வெளிநாட்டில் வியாபாரிகளாக, கல்விமான்களாக, ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர்.
யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்ப நீங்கள் யோசிப்பீர்கள்தானே? உங்கள் அறிவை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வாருங்கள். உங்கள் நிதியை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வாருங்கள். இந்த நேரத்தில் கொண்டு வராத நிதி மற்றும் அறிவால் பலனில்லை. எங்களுக்கும் எங்கள் கட்சிக்கும் ஒரே எதிர்பார்ப்பு இருக்கின்றது. அது இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதுதான்.
இங்கே ஏனைய கட்சித் தலைவர்கள் பலர் என்ன கூறுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலின் பின்பு இந்த அரசிலும் அமைச்சுப் பதவி எடுப்பேன் என்கின்றனர். ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு நாம் பலரை அழைத்தபோது பழைய தொடர்புகளை விட முடியாது எனக் கூறி இரண்டாகப் பிரிந்து நின்று அந்தத் தலைவர்களின் மேடையில் ஏறி அலங்கரித்தனர்.
தலைவர்களே நீங்கள் பஸ்ஸை தவற விட்டு விட்டீர்கள். எனவே, யாழ். இளைஞர்களே தேசிய மக்கள் சக்தியின் கொடியை ஏந்துங்கள். பஸ்ஸை தவற விட்டவர்களுக்கு இனி அரசிள் இடமில்லை. நாம் தேசிய ஒற்றுமையை வளர்ப்போம்.
வடக்கு மக்களே உங்கள் காணிகளைப் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று அரசியல் கைதிகளை விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுப்போம்.
இந்திய மீனவர்கள் இன்று உங்கள் கடல் முழுவதையும் அழித்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். உங்கள் கடலின் உரிமையை நாங்கள் உறுதிப்படுத்துவோம்.” – என்றார்.