நித்திரை கொள்ளும் பிரதிநிதிகளை இம்முறை தெரிவு செய்ய வேண்டாம்! – மக்களிடம் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் கலைத்தேவன் கோரிக்கை.
“கொழும்பில் இருந்து கொண்டு மைக்கைக் காதிலே போட்டுக்கொண்டு நித்திரை கொள்கின்ற உறுப்பினர்களை இந்தத் தேர்தலில் தெரிவு செய்ய வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் பா.கலைத்தேவன் தெரிவித்தார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வன்னியில் தற்போது ஏற்ப்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை பல்வேறு கட்சிகளின் பால் எமது மக்களை ஈர்த்துள்ளது. பெரிய பண முதலைகள் தமிழரசுக் கட்சியின் வாக்குக்களைச் சிதறடிப்பதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எனவே, மக்கள் சிந்திக்க வேண்டும்.
ஒரு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவரை தெரிவு செய்யும்போது அவர் நல்ல ஆளுமை உள்ளவரா என்று பார்க்கின்றோம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் என்பது எமது மாவட்டத்துக்கான பிரதிநிதிகளை அனுப்பும் தேர்தலாகும். மக்களின் பிரச்சினைகளைச் சரி செய்யக் கூடிய ஒருவராக அவர் இருக்க வேண்டும்.
கொழும்பிலே போய் இருந்து கொண்டு மைக்கைக் காதிலே போட்டுக்கொண்டு நித்திரை கொள்கின்ற உறுப்பினர்களைத் தயவு செய்து தெரிவு செய்ய வேண்டாம் என்று தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழரசுக் கட்சியானது பாரம்பரிய கட்சி. எமது இனத்தின் தனித்துவத்தைப் புறம்தள்ளி இலங்கை அரசியலை ஒருபோதும் செய்ய முடியாது. எனவே, இந்தத் தேர்தலில் ஆற்றல் உள்ள, ஊழல் செய்யாத புதியவர்களைத் தெரிவு செய்ய வேண்டும்.
எனவே, எமது வீட்டுச் சின்னத்துக்கு வாக்களித்து எனது வெற்றி இலக்கமான 7 இற்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.