நேற்று இரவு 12 மணியுடன் தேர்தல் தொடர்பான பிரசாரம் நிறைவடைந்தது : நவம்பர் 12 வரை கட்சி செயல்பட முடியும்.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பான பிரசாரம் நேற்று(11) நள்ளிரவுடன் நிறைவடைந்தது. 12ம் திகதி முதல் தேர்தல் நடைபெறும் 14 ஆம் திகதி வரை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, “அமைதியான காலம்” அமலில் இருக்கும்.
தேர்தல் அடிப்படையில் நிறுவப்பட்ட பிரச்சார அலுவலகங்களின் நடவடிக்கைகள் நவம்பர் 12 நள்ளிரவு முதல் முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தேர்தல் வேட்பாளர்களுக்கு நினைவூட்டுகிறார். அன்றிலிருந்து அந்தந்த தேர்தல் மாவட்டங்களில் நிறுவப்பட்ட கட்சி அல்லது சுயேச்சைக் குழு அலுவலகங்கள் மட்டுமே செயல்பட முடியும் என்று அவர் கூறுகிறார்.
நவம்பர் 12 நள்ளிரவு வரை வேட்பாளர்கள் தங்கள் அலுவலகங்களை நடத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். இருப்பினும், அங்கு எந்த விளம்பரப் பொருளையும் காட்ட முடியாது, மேலும், வாக்குச்சாவடியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் பிரசார அலுவலகம் அல்லது வேட்பாளரின் வீடு இருந்தால், அங்கும் பிரசார விளம்பரங்கள் வைக்கக் கூடாது.
இந்த தேர்தல் விதிகளை மீறும் தேர்தல் வேட்பாளர்களின் வேட்புமனு ரத்து செய்யப்படலாம் எனும் சட்ட விதிகள் உள்ளன என்பதை தேர்தல் ஆணையம் அனைத்து அரசியல் வேட்பாளர்களுக்கும் நினைவூட்டுகிறது.