குஜராத் மாநிலத்தில் இயங்கிவரும் ஐஒசி சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீவிபத்து!
குஜராத் மாநிலம், வதோத்ரா பகுதியில் உள்ள கோயாலி எனும் இடத்தில் இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐ.ஓ.சி) சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டுவருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
குஜராத் மாநிலம், கோயாலி பகுதியில் இயங்கிவரும் ஐஓசி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஐஓசி நிலையத்தில் இருந்து கரும்புகை எழும்பி அந்த இடத்தையே சூழ்ந்தது. இந்தக் கரும்புகை சில கி.மீ. வரை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விபத்து குறித்துப் பேசிய வதோத்ரா காவல் ஆணையர், நரஷிம்ம கோமர் “இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த ஒரு சேமிப்பு டேங்கில் தீ ஏற்பட்டு வெடித்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் மூலம் தெரிகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உடனடியாக தீயணைப்புத் துறை அங்கு வரவழைக்கப்பட்டது. மேலும், பாதிப்புக்குள்ளான சேமிப்பு கிடங்கு இருக்கும் பகுதிக்கு அருகே யாரும் செல்லமுடியாதபடி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
அந்தப் பகுதி எம்.எல்.ஏ. தர்மேந்திர சிங் வகேலா, “கிராமத் தலைவர் மூலம் எனக்குத் தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தீவிபத்துக்கான காரணம் குறித்துத் தகவல் சேகரிக்கப்பட்டுவருகின்றன. இதுபோல் மற்றொரு சம்பவம் வரும் காலத்தில் நடக்காமல் இருக்க, ஆட்சியர், துணை ஆட்சியர், காவல்துறை மற்றும் ஐஓசி அதிகரிகளுடன் அவசர ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த விபத்தில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.