நிலம் கேட்டுச் சென்ற அதிகாரிகளை கற்களால் தாக்கி விரட்டி அடித்த விவசாயிகள்!
தெலங்கானா மாநிலத்தில் உள்ள கொடங்கள் சட்டமன்றத் தொகுதி அம்மாநில முதல்வரான தேஜேந்திர ரெட்டியின் சொந்த தொகுதியாகும். அத்தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆர்வம் காட்டி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக கொடங்கள் தொகுதியில் உள்ள லாகசரளா கிராமத்தில் மருந்து தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க அரசு சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது. அதன் மூலம் உள்ளூர் மக்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணித்திருந்தனர்.
ஆலை அமைக்கத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் லாகசரளா கிராமத்திற்குச் சென்றனர். ஆனால் கிராம மக்களுக்கு தொழிற்சாலை வருவதில் விருப்பமில்லை.
இதனால், அதிகாரிகளின் வருகைக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த விவசாய சங்கத்தினர், தங்கள் கிராமத்தில் தொழிற்சாலை அமைக்க வேண்டாம் எனக்கூறி அதிகாரிகளைப் புறக்கணித்தனர். ஒரு சில அதிகாரிகள் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புரிய வைக்க முயன்றனர். ஆனால் விவசாயிகள் அதிகாரிகளைத் திரும்பிச் செல்ல வலியுறுத்திக் கோஷம் போட்டனர்.
ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த மக்கள், மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளின் கார்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். கட்டைகளால் சுற்றி வளைத்து அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தனர்.
நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கடும் பதற்றம் காரணமாக லாகசரளா கிராமத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மருந்து தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்டோரின் கார்கள் மீது கற்கள் வீசித் தாக்கி விரட்டியடித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.