நானாட்டானில் மேய்ச்சல் தரைகள் ஆக்கிரமிப்பு! வடக்கு ஆளுநரிடம் பாதிக்கப்பட்டோர் முறையீடு!!

மன்னார் – நானாட்டான் பகுதியில் உள்ள மேய்ச்சல் தரைகள் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பாக இன்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் நானாட்டான் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினர் மகஜர் கையளித்துள்ளனர்.

கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் மன்னார் – நானாட்டான் பகுதியில் கால்நடை வளர்ப்போர்கான மேய்ச்சல் தரைகள் ஒதுக்கப்பட்டுள்ள போதும் அந்த இடங்கள் இன்னும் கையளிக்கப்படாமல் உள்ள நிலையில் இன்று நானாட்டான் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினர் வடக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து வடக்கு மாகாண ஆளுநரிடம் தமது மகஜரை அவர்கள் கையளித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் நானாட்டான் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கே.எம்.நிஹால் கருத்துத் தெரிவிக்கையில்,

“2 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றார்கள். இவற்றுக்குரிய மேய்ச்சல் தரை காணி ஒதுக்கப்பட்டுள்ளபோதும் அவை எங்களிடம் கையளிக்கப்படவில்லை.

மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைச் சிலர் சட்டவிரோதமாகக் காடழிப்பு செய்து பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதில் ஒரு சில அரச அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

எனவே, இந்தப் பிரச்சினை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளோம். ஆளுநர் எதிர்வரும் 21ஆம் திகதி மன்னார் நானாட்டான் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு உரிய தீர்வைப் பெற்றுத் தருவதாக எங்களிடம் தெரிவித்தார்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.