நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நெடுந்தீவுக்கு விசேட படகு சேவைகள்.

நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தீவுப் பகுதிகளுக்கான விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
நெடுந்தீவில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கான படகுச் சேவைகளின் அடிப்படையில், குறிகட்டுவான் காலை 8.00 மணிக்கு வடதாரகைப் படகும், 8.15 மணிக்கு சமுத்திரதேவா படகும், 11.30 மணிக்கு குமுதினிப் படகும், பிற்பகல் 1.00 மணிக்கு கரிகணன் படகும், 2.30 மணிக்கு குமுதினிப் படகும், மாலை 4.00 மணிக்கு சமுத்திரதேவா படகும், மாலை 5.30 மணிக்கு வடதாரகை படகும் நெடுந்தீவு துறைமுகத்துக்குச் செல்லவுள்ளன.
அதேபோன்று நெடுந்தீவு துறைமுகத்தில் இருந்து காலை 6.45 மணிக்கு வடதாரகைப் படகும், 7.00 மணிக்கு சமுத்திரதேவா படகும், 10.30 மணிக்கு குமுதினிப் படகும், 11.30 மணிக்கு கரிகணன் படகும், பிற்பகல் 1.00 மணிக்கு குமுதினிப் படகும், 3.00 மணிக்கு சமுத்திரதேவா படகும், மாலை 4.30 மணிக்கு வடதாரகைப் படகும் குறிகட்டுவான் துறைமுகத்துக்குப் பயணிக்கவுள்ளன.
அத்துடன், நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவுப் பகுதிகளுக்கான விசேட கடற்போக்குவரத்து ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு உரிய பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் கூறினார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இருந்து இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவை ஆகியவற்றின் போக்குவரத்து ஒழுங்குகளும் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மேலும் குறிப்பிட்டார்.