வன்முறையற்ற தேர்தல் காலம் போய் ஊழல் நிறைந்த தேர்தல் களம் உருவாகியுள்ளது. – ஐரோப்பிய யூனியன் தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் திலகர் எடுத்துரைப்பு.
ஊழலற்ற அரசாங்கத்தை அமைப்போம் என்கின்ற மகுட வாசகத்தைக் கொண்டு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கிற இந்த சந்தர்ப்பத்தில், மிக மிக ஊழல் நிறைந்த தேர்தல் களத்தில் இந்த 2024 பொதுத்தேர்தல் நடைபெறுகிறது என ஐரோப்பிய யூனியன் தேர்தல் கண்காணிப்பு பிரதிநிதிகளிடம் மலையக அரசியல் அரங்கத்தில் செயலதிபரும் நுவரெலியா மாவட்ட உதயசூரியன் அணியின் தலைமை வேட்பாளருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனின் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் மலையக அரசியல் அரங்கத்துக்குமான சந்திப்பு நுவரெலியாவில் (12/11/2024) இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த ஒரு தசாப்தங்களுக்கு முன்னதாக இலங்கையில் நடைபெறும் தேர்தல்களின் போது அவை வன்முறை நிறைந்ததாக இருக்கும். அவற்றை இல்லாமல் ஆக்குவதற்காக கடந்த காலம் முழுவதுமாக பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுத்து சட்டதிட்டங்களை உருவாக்கி அதன் ஊடாக அவை தடுக்கப்பட்டுள்ளன அல்லது குறைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இன்று வன்முறைக்கு மாறாக ஊழல்கள் தலைவிரித்தாடும் தேர்தல் இடம் பெற ஆரம்பித்துள்ளது.
தனியார் கம்பெனிகள் அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும், சுயேச்சைக் குழுக்களையும் விலைக்கு வாங்கி ஜனநாயக தேர்தலை பணநாயகத் தேர்தலாக மாற்றியுள்ளன.
தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் அல்லாதவர்கள் சுவரொட்டி ஒட்டி வாக்கு சேகரிக்கிறார்கள்.
சுயேச்சைக் குழுவொன்று தான் போட்டியிட்டுக் கொண்டு வேறு கட்சிக்கு விலை போய் வாக்கு சேகரிக்கிறார்கள்.
வாக்காளர்களுக்கு பணம், பொருள் விநியோகம் செய்கிறார்கள். தொண்டு நிறுவனங்களின் போர்வையில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பொருள் விநியோகம் செய்கின்றனர். கட்சிகளே தமக்கான ஊடகங்களையும் நடாத்திக்கொள்கின்றன.
அரசாட்சியில் ஊழல் என அதனை மாற்ற வந்த அரசாங்கத்தில் அரசாங்கத்தை அமைக்கப் போகும் தேர்தலில் நடைபெறும் போதே இத்தகைய ஊழல் இடம்பெறுவது வருத்ததுக்கு உரியது.
இனி அரசாட்சியில் மட்டுமல்ல தேர்தல்களில் இடம்பெறும் ஊழல்களுக்கு எதிராகவும் கடுமையான சட்டதிட்டங்களை உருவாக்க வேண்டி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.