புல்டோசர் மூலம் வீட்டை இடிப்பது சட்டவிரோதம் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடு மற்றும் கட்டடங்களை இடிப்பது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் குற்றம்சாட்டப்பட்டவர்களின் குடியிருப்புகளை புல்டோசர் மூலம் இடிப்பதை வழக்கமாக வைத்துள்ளன. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆக்கிரமிப்பு வீடுகளாக இருந்தால் கூட, உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் இடிக்கக் கூடாது என விதிமுறைகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியது. அப்படி இருக்கையில், ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டதால், அவரது வீட்டை அரசாங்கம் இடித்துத் தள்ளுவது, அதிகாரப்பகிர்வு கொள்கையை மீறுவதாகும் என நீதிபதிகள் கண்டித்தனர்.

அரசும், அதிகாரிகளும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தன்னிச்சையான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்று கூறிய உச்சநீதிமன்றம், சட்டத்தின் ஆட்சி என்பது ஜனநாயக அரசாங்கத்தின் அடித்தளம் என்று சுட்டிக்காட்டியது.

அரசு நிர்வாகம் ஒருவரை குற்றவாளி என அறிவிக்க முடியாது எனத் தெளிவுப்படுத்திய உச்சநீதிமன்றம், குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒருவரின் வீட்டை இடிப்பது சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டைப் பாதிக்கும் என்றும் கூறியது.

இது தொடர்பான வழக்குகளில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படும் அதிகாரிகளே குற்றவாளிகள் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். அரசியலமைப்பின் 19 ஆவது சட்டப்பிரிவின் படி, தங்குமிடம் என்பது அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் மேற்கோள் காட்டியது.

ஒரு சராசரி குடிமகனுக்கு வீடு கட்டுவது பல வருட உழைப்பு மற்றும் கனவு என்று கூறிய உச்சநீதிமன்றம், அதனை அகற்றுவது மட்டுமே ஒரே வழி என்றாலும், அதனை விதிகளின் அடிப்படையில் முறைப்படி செய்ய வேண்டும் என்று கூறியது.

இந்நிலையில், 15 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிடாமல், எந்தக் கட்டடங்களையும் இடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களை இடிப்பதற்கும் உச்சநீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.