பாபா சித்திக் இறந்துவிட்டாரா என்பதை உறுதி செய்ய மருத்துவமனையில் கூட்டத்தோடு காத்திருந்த கொலையாளிகள்!

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளிகள், அவர் இறந்துவிட்டாரா என்பதை உறுதி செய்துகொள்ள, கூட்டதுடன் கூட்டமாக நின்றிருத்தாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி சிவக்குமார் கௌதம், உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

காவல்துறையிடம், சிவக்குமார் கௌதம் கூறுகையில், பாபா சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, ஆட்டோ பிடித்து, லீலாவதி மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அங்கு வெளியே அவரது ஆதரவாளர்களுடன் ஒருவராக நின்றுகொண்டு, சித்திக் இறந்துவிட்டாரா என்பதை அறிந்துகொள்ள காத்திருந்ததாகவும், அப்போதுதான், மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதும், அங்கிருந்து கிளம்பியதாகவும் கூறியிருக்கிறார்.

23 வயதாகும் கொலையாளி சிவா, அங்கிருந்து புனே தப்பிச் சென்று, லக்னௌ கிளம்பியிருக்கிறார். நேபாளத்துக்கு தப்பிச் செல்லவிருந்த நிலையில், காவல்துறையினர், சிவ குமாரை நவ. 10ஆம் தேதி கைது செய்திருக்கிறார்கள்.

இதுபற்றி காவல்துறை கூறுகையில், கௌதம், ஹரியாணாவைச் சேர்ந்த கர்நெயில் சிங், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் ஆகியோருடன் சேர்ந்து, அக். 12ஆம் தேதி, மும்பையில் உள்ள மகனின் அலுவலகத்துக்கு வெளியே நின்றிருத் பாபா சித்திக்கை சுட்டுக் கொன்றுள்ளார்.

கொலை நடந்ததுமே, மற்ற குற்றவாளிகள் பிடிபட்ட நிலையில், கௌதம் மட்டும் அங்கிருந்து தப்பியோடினார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கௌதம், இருமாநில காவல்துறையின் கூட்டு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்ய வந்தபோதே, சிவாக்குமார் கௌதம் கையில் இரண்டு ஆடைகளை வைத்திருந்துள்ளார். கொலை செய்ததும், அங்கிருந்து சென்று ஆடையை மாற்றிக்கொண்டு, அணிந்திருந்த சட்டை மற்றும் துப்பாக்கியை சாலையோரம் இருந்த காருக்கு அடியில் வைத்துவிட்டு மீண்டும் கொலை செய்த இடத்துக்கே வந்துள்ளனர். அங்கு வந்த போதுதான், சித்திக் எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்ததும் உடனடியாக ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார் சிவக்குமார் கௌதம்.

அங்குச் சென்று தனது வேலை கச்சிதமாக முடிக்கப்பட்டதா என்பதை உறுதிசெய்து கொள்ள காத்திருந்ததாகவும், சித்திக் இறந்துவிட்டதை அறிந்துகொண்ட பிறகே அங்கிருந்து சென்றதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

கொலை செய்தது எப்படி?

சிவக்குமார் கௌதமிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சில நாள்கள் மும்பையில் தங்கியிருந்து சித்திக்கின் நடமாட்டத்தை கவனித்து வந்ததாகவும், அக். 12ஆம் தேதி இரவு அவரைக் கொல்ல சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும், சுட்டுக்கொன்றதாகவும் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவித்தன.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தனக்கு இருக்கும் தொடர்பை சிவக்குமார் கௌதம் ஒப்புக்கொண்டிருப்பதாகவும், சிறையில் இருக்கும் லாரன்ஸ் தம்பி அன்மோல் பிஷ்னோய் உத்தரவின்பேரிலேயே சித்திக்கை கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

கொலை செய்துவிட்டு முதலில், மத்தியப் பிரதேசம் தப்பிச் சென்றிருக்கிறார். காவல்துறையினர் அவரை பின்தொடர்ந்து அங்குச் சென்றபோதும் அவரை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் கௌதமின் குடும்ப உறுப்பினர்கள் உள்பட 45 பேரின் நடமாட்டத்தை காவல்துறை கவனித்து வந்தார்கள். அதில் 4 பேர் கௌதமுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போதுதான், சிவக்குமார் கௌதமின் வீட்டுக்கு அருகே இருந்த ஒரு வீடு பாதுகாப்பானதாகக் கருதப்பட்டு நால்வரும் கௌதமை சந்திக்க திட்டமிட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கௌதமை சதிக்க வந்த போது, நால்வருடன் சேர்த்து சிவக்குமார் கௌதமையும் காவல்துறையினர் சுற்றிவளைத்துக் கைது செய்திருக்கிறார்கள்.

விரைவில் அவர் நேபாளம் தப்பிச் செல்லவிருந்த நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த வழக்கில் 20 பேர் வரை கைதாகியிருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.