தமிழ்க் குடும்பங்களில் தொடரும் கொலைகள் முடிவுக்கு வருவது எப்போது?
புலம்பெயர் தமிழ்க் குடும்பங்களில் தொடரும் கொலைகள் முடிவுக்கு வருவது எப்போது?
– சண் தவராஜா
பணம் காய்க்கும் மரங்களாகவும், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரான காலப் பகுதியில் ~அரசியல் செய்கிறோம்| என்ற பெயரில் இலங்கைத் தீவில் வீணான(?) தலையீடுகளைச் செய்து குழப்பங்களைத் தூண்டுவோர் என மாத்திரமே இதுகாறும் அறியப்பட்டிருந்த புலம்பெயர் தமிழர்கள் திடீரென ~வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகளாக| எப்படி மாறினார்கள் என வாசகர்களுக்கு வியப்பாக இருக்கலாம். பிரான்ஸ் தலைநகரில் கடந்தசில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற கொடூரமான கொலைகளின் குருதி காய்வதற்கு முன்னரேயே இங்கிலாந்தின் தலைநகரில் மற்றுமொரு குடும்ப வன்முறை நடந்தேறியிருக்கின்றது. முன்னைய சம்பவத்தில் பாதித்தவரும், பாதிப்புக்கு ஆளாகியோரும் ஈழத் தமிழர்களாக இருக்கையில், இங்கிலாந்துச் சம்பவத்தில் பாதித்தவரும், பாதிப்புக்கு ஆளாகியோரும் மலேசியத் தமிழர்களாக உள்ளார்கள். கொரோனாத் தொற்று உலகை ஆட்டிப் படைக்கும் இன்றைய காலகட்டத்தில், கண்ணுக்குத் தெரியாத அந்தத் தீநுண்மி எம்வீட்டுக் கதவை எப்போது தட்டுமோ என்ற அச்சத்தில் யாவரும் இருக்கையில் இதுபோன்ற கற்பனைக்கு எட்டாத வன்முறைகள் எமது இனத்தின் எதிர்காலம் தொடர்பான கவலைகளை ஏற்படுத்துவதை மறுப்பதற்கில்லை.
‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்ற உயர்ந்த பண்பாட்டைக் கொண்ட கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளொடு முன்தோன்றிய மூத்தகுடிக்கு என்னதான் ஆகிவிட்டது? அண்மையில் தமிழ்நாட்டின் கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் வெளியான தமிழர்களது பெருமிதம் என்னவானது? உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களை எல்லாம் ஒன்றிணைத்த ஈழப் போராட்டம் எமக்குத் தந்த பரிசு இதுதானா? மேலைநாடுகளின் சுதந்திரமான கலாசாரச் சூழலிலே வாழ்ந்தாலும் கூட மூடப்பட்ட சமூகங்களாகவே வாழ முற்படும் தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத கூறுகளுள் ஒன்றாக குடும்ப வன்முறைகள் தொடர்ந்து நீடிக்கப் போகின்றதா?
எமது தலைமுறையில் இல்லாத புதிய அச்சுறுத்தல் கொரோனா கொள்ளைநோய் என்பதை மறுப்பதற்கில்லை. அதனால் ஒவ்வொரு மனிதனும் மனதளவிலும், பொருளாதார அடிப்படையிலும் பாதிக்கப்பட்டுள்ளான். ஆனால், அந்தப் பாதிப்புகளின் விளைவாகவேதான் குடும்ப வன்முறைகள் அரங்கேறுகின்றன என வகைப்படுத்திவிட முடியுமா? அதுவே உண்மையானால் வேறு சமூகங்களில் இதுபோன்ற வன்முறைகள் ஏன் நிகழவில்லை? அது மாத்திரமன்றி, குடும்ப வன்முறைகளில் ஈடுபடுவோர் பற்றி வெளியாகும் தகவல்களில் அவர்களுள் எவரும் பழைய குற்றப் பின்னணியோ அன்றி போதைப்பொருள் பாவனையாளர்களோ அல்ல என்ற தகவல்கள் தரும் பொருள் என்ன? பொருளாதாரப் பிரச்சனையே காரணமென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மேலைநாடுகளில் அரசாங்கங்களினால் வழங்கப்படும் சமூக உதவித் திட்டங்களை ஏன் நாடவில்லை?
கேள்விகள், கேள்விகள். விடை தெரியாத கேள்விகள். இந்தக் கேள்விகள் யாவும் சம்பவம் நடைபெற்ற ஒருசில நாட்களுக்கே. பாதிக்கப்பட்ட குடும்பங்களும் அவர்களுடைய உறவுகளும் மாத்திரமே குறிப்பிட்ட காலம் துயரத்தைச் சுமந்துகொண்டு இருக்கப் போகிறவர்கள். குறிப்பிட்ட காலம் வரை ஊடகங்களுக்குத் தீனியாகும் இதுபோன்ற சம்பவங்கள் மற்றுமொரு தடவை இதுபோன்ற வன்முறை இடம்பெறும் போது நினைவு கூருவதற்கு மாத்திரமே பயன்படும்.
80 களில் வெளிவந்த நிறம் மாறாத பூக்கள் என்ற படத்தில் ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். நடிகர் விஜயனின் குரலில் ஒலிக்கும் அந்த வசனம் ‘இந்தச் சமூகத்துக்கு பழி சொல்லத் தெரியும், வழி சொல்லத் தெரியாது” என்பதே. 80 களில் கேட்ட இந்த வசனம் இன்றும் மனதில் நிற்கக் காரணம் அது மனதில் ஏற்படுத்திய தாக்கமே. பழி சொல்வதற்குத் தயாராக என்றென்றும் சமூகம் முன்நிற்கின்றது என்பதை எமது வாழ்நாளில் நாம் பல தடவை உணர்ந்திருப்போம். ஆனால், என்றாவது இந்தச் சமூகம் நமக்கு வழி சொல்லியிருக்கின்றதா? ஆகக் குறைந்தது வழி சொல்வதற்கு முயற்சியாவது செய்திருக்கிறதா? ஆகக் குறைந்தது, சமூகத்திற்கு அத்தகைய ஒரு பொறுப்பாவது இருக்கிறதா?
மனிதன் ஒரு சமூக விலங்கு. சமூக விலங்கானது கூட்டமாக வாழும் பழக்கத்தைக் கொண்டது. மனிதனும் காடுகளில் வாழும்போது கூட்டங் கூட்டமாகவே வாழ்ந்திருந்தான். நாகரிக வளர்ச்சியால் கூட்டங்களாக வாழ்ந்த மனிதன் தனித்தனியாக வாழும் நிலை உருவானது. கூட்டங்கள் காணாமற்போய், கூட்டுக் குடும்பங்களாகி அதுவும் ஒரு காலகட்டதில் காணாமற் போய் தற்போது கருக் குடும்ப காலகட்டத்தில் நாம் நிற்கிறோம். கருக் குடும்ப வாழ்க்கை கூடச் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஒரு வீட்டில் ஆகக் குறைந்தது இரண்டு பேர் இருந்தாலும் கூட அவர்கள் மத்தியில் சுமுகமான கலந்துரையாடல் நடைபெறுவதைக் காண முடிவதில்லை.
குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டாக வாழ்வதை திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் மாத்திரமே தற்போது பார்க்கக் கூடியதாக உள்ளது. இனிமேலும் மனிதனைச் சமூக விலங்கு என அழைப்பது பொருத்தமா? அவ்வாறு உண்மையிலேயே மனிதன் சமூக விலங்காக இருந்தால் இதுபோன்ற குடும்ப வன்முறைகளுக்கும் வகைகூறக் கடமைப்பட்டவன் அல்லவா?
‘ஐயோ, பாவம்” என்ற வசனத்துடன் பிரான்சில் நடைபெற்றதைப் போன்ற குடும்ப வன்முறையைக் கடந்து செல்பவர்கள் எம்மில் அநேகர். இவர்களைப் பொறுத்தவரை இதுபோன்ற சம்பவங்கள் எமது குடும்பத்தில் நடக்கவில்லை என்று திருப்தி கொள்பவர்கள். அதனைக் கடந்து அவர்களால் சிந்திக்க முடிவதில்லை, அல்லது சிந்திக்க விரும்புவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு செய்தி மாத்திரமே.
இப்படியான செய்கைகள் வாயிலாக ஒட்டுமொத்த தமிழனத்திற்குமே தலைகுனிவு என நினைக்கும் ஒரு சாராரும் எம்மத்தியில் உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை நடந்த சம்பவம் பற்றியோ அல்லது பாதிப்புக்கு ஆளாகியோர் பற்றியோ கவலையோ, இரக்கமோ இருப்பதில்லை. அவர்கள் தமிழர்கள் இல்லாமல் இருந்தாலேயே போதும் என்பதே அவர்களின் நிலைப்பாடு.
நாட்டாமை போல எதற்கெடுத்தாலும் தீர்ப்பு வழங்கும் பழக்கம் கொண்டோர் “குடும்ப வன்முறைக்குக் காரணம் பெண்ணின் நடத்தையே” என மனதார நம்புபவர்கள். அதனை அவர்கள் பகிரங்கமாகத் தெரிவிப்பதற்கும் தயங்குவதில்லை. ஆணாதிக்க மனோபாவம் கொண்ட இவர்கள் பெண்களின் நியாயங்களைக் கணக்கிலேயே எடுப்பதில்லை.
“கொலைகளைப் புரிந்தவன் மனிதனே அல்ல. அவன் ஒரு மிருகம்” எனச் சொல்பவர்கள் உண்மையின் பக்கத்தில் வருகிறார்கள் என்பது எனது கருத்து. தக்கென பிழைக்கும் என்ற கூர்ப்பு விதிக்கு அமைவாக, காடுகளில் மிருகங்களோடும், இயற்கையோடும் போராடி வாழ்ந்த மனிதனின் வாழ்வில் கொலை செய்வது என்பது ஒரு இயல்பான செயற்பாடு. கொலை செய்வதன் ஊடாகவே அவன் உயிரைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தபோது, தவிர்க்க முடியாமல் கொலைகளைப் புரிந்தவனே மனிதன். தற்போது கூட எமது உணவுத் தேவைகளுக்காக எத்தனையோ வகையான மிருகங்களை நாம் கொல்கிறோம்.
உளவியலாளர்களின் கருத்தின்படி கொலை செய்வது மற்றும் தற்கொலை செய்து கொள்வது என்பவற்றுக்கான இயல்பூக்கம் கொண்டவனே மனிதன். கல்வி, நாகரிகம், பண்பாட்டு வளர்ச்சி, சமூகக் கட்டுப்பாடு, சட்டம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த இயல்பான இயல்பூக்கத்தில் இருந்து விடுபடும் திறனை மனிதன் பெற்றிருக்கிறான். துர்வாய்ப்பாக எமது சமூகத்தில் வாழும் அனைவராலும் இந்த இயல்பூக்கத்தில் இருந்து விடுபட முடியாமற் போய் விடுகின்றது.
“பிரச்சனைகள் அற்ற மனிதர்கள் இருவரே. ஒருவர் இன்னமும் பிறக்கவில்லை. மற்றவர் ஏற்கனவே இறந்து விட்டார்” என்ற சொலவடை சொல்லும் சேதி முக்கியமானது. மானுட வாழ்க்கையில் பிரச்சனைகளும், அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகளும் சேர்ந்தே இருந்திருக்கின்றன. தனிநபர் சார்ந்த விழுமியங்களை விடவும், சமூகம் சார்ந்த விழுமியங்களே பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் அதிக பங்களிப்பை நல்கியிருக்கின்றன என்பதே மானுடகுல வரலாறு.
தமிழ்ச் சமூகத்தில் குறிப்பாக புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் ஒருவர் தனது பிரச்சனையை மனம்விட்டுப் பேசி, ஆலோசனை, வழிகாட்டல் பெறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளனவா? பெரிதாக இத்தகைய வாய்ப்பு இல்லாவிடினும், ஓரளவேனும் அதற்கான வாய்ப்பு இருப்பதை நிராகரிப்பதற்கில்லை. ஆனால், அத்தகைய ஆலோசனை மையங்களுக்குச் செல்வதிலும் எமது மக்களின் பண்பாடு தடையாக இருந்து வருகின்றது. “எமது விடயங்கள் வெளியே தெரிந்தால், மானம் போய்விடுமே” என்ற அச்சம் தமிழ் மக்களில் அநேகர் மனம்திறந்து கதைப்பதற்குத் தடையாக இருந்து வருகின்றது.
மன அழுத்தம் அல்லது உளச் சிக்கல் என்பது இன்றைய காலகட்டத்தில் காய்ச்சல், தலையிடி என்பதைப் போன்ற ஒரு நோய் மாத்திரமே. இத்தகைய நோய்க்குச் சிகிச்சை தருவதற்கான மருத்துவமனைகள் உலகம் பூராவும் நிறைந்து கிடக்கின்றன. அவற்றை அணுகுவதற்குத் தமிழர்கள் தயாராக இல்லை என்பதே சிக்கல்.
எமது வாழ்வில் நாம் பல்வேறு மாற்றங்களைக் கடந்தே இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். எனவே, மனம்விட்டுப் பேசுதல் என்ற விடயத்திலும் மாற்றம் வரவேண்டும். அதற்கான முயற்சிகளை சமூக ஆர்வலர்கள் மேற்கொள்ள வேண்டும். 21 ஆம் நூற்றாண்டிலும் கூட பேசாப் பொருட்களின் நீளமான பட்டியலை நாம் கொண்டுள்ளோம் என்பது உண்மையே. தீண்டாமை எவ்வாறு சமூகத்தில் ஒழிக்கப்பட வேண்டுமோ அதைப் போன்றே போசாப் பொருட்களின் பட்டியலும் ஒழிக்கப்பட வேண்டும்.
எத்தனையோ விடயங்களுக்குச் சங்கங்கள், கழகங்கள் வைத்து நடாத்திக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குடும்ப விவகாரங்களைப் பற்றிப் பேச, ஆலோசிக்க ஏன் ஒரு சங்கம் கூட இல்லை?
தமிழ்க் குடும்பங்களில் நிலவும் ஆணாதிக்க மனோபாவம் பெரும்பாலான முரண்பாடுகளுக்குக் காரணமாகின்றது. பெண்கள் இன்று தன்னுரிமை பெற்று விட்டார்கள் என்பதை அங்கீகரிப்பதில் பெரும்பாலான ஆண்களுக்கு உடன்பாடு இல்லை. கணிசமானோர் அது விடயத்தைப் புரிந்து கொள்வதற்கே முயல்வதில்லை. புலம்பெயர் சமூகத்தில் குடும்பத்துக்கு வெளியே உள்ள பெண்களின் தனித்துவத்தை ஏற்றுக் கொள்ளுவோர் வீடுகளில் அதனை அங்கீகரிப்பதற்கு முன்வராத நிலையே உள்ளது. இந்த நிலையில் மாற்றம் தேவை.
குடும்ப வன்முறைகளில் பார்வையாளர்களாக இருப்பதை நிறுத்த வேண்டும். எமது வீட்டில், அயல் வீட்டில் பெண்கள் எவ்வாறு நடத்தப் படுகின்றார்கள் என்பதை அவதானியுங்கள். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அவர்களுக்காகத் தைரியமாகக் குரல் கொடுங்கள். உங்கள் குரல் ஒரு குடும்பத்தின் சிதைவைத் தடுத்து நிறுத்தக் கூடும். நாம் அவதானிக்கப் படுகின்றோம் என்ற எண்ணமே ஒரு கொலையைத் தடுக்கப் போதுமானது.
துர்வாய்ப்பாக புலம்பெயர் மண்ணில் இளைய தலைமுறையின் மத்தியில் கூட குடும்ப வன்முறையின் அடையாளங்களைக் காண முடிகின்றது என்பதை வேதனையுடன் பதிவுசெய்தே ஆகவேண்டியிருக்கின்றது.
மாற்றம் எம்மிடமிருந்தே வரவேண்டும். அதற்கான முயற்சியில் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும். பிரான்சில் நடைபெற்றதைப் போன்ற ஒரு சம்பவம் மீண்டும் ஒரு தடவை பூமிப் பந்தில் இடம்பெறாமல் தடுப்பது எமது கைகளிலேயே உள்ளது. நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்.