அரசமைப்பின் ’20’ சட்ட வரைவை திருத்தியமைப்போம்! நிறைவேற்றுவோம்! ராஜபக்ச அணி விடாப்பிடி
அரசமைப்பின் ’20’ சட்ட வரைவை
திருத்தியமைப்போம்!
நிறைவேற்றுவோம்!!
ராஜபக்ச அணி விடாப்பிடி
“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்குத் தலைசாய்க்கின்றோம். அதைத் திருத்தியமைத்து நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவோம். இந்த முடிவிலிருந்து நாம் அணுவளவும் பின்வாங்கக்கூடாது.”
– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர் சமல் ராஜபக்ச ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்களுடன் ராஜபக்ச சகோதரர்கள் நடத்திய முக்கிய கலந்துரையாடலின்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“20ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து நாட்டு மக்கள் குழப்படையத் தேவையில்லை.
20ஆவது திருத்தம் தொடர்பான நாடாளுமன்றக் குழு நிலை விவாதத்தில் அதில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் வெளிவந்துள்ளது.
எனவே, அரசு சுலபமான முறையில் ’20’ இல் திருத்தங்களை மேற்கொள்ளும்.
20 ஐத் திருத்தியமைத்து அதை நிறைவேற்றுவதில் ஜனாதிபதியும், பிரதமரும், சமல் ராஜாபக்ச உள்ளிட்ட சிரேஷ்ட அமைச்சர்களும் உறுதியாக உள்ளனர்” – என்றார்.