வாழைச்சேனையில் கோஸ்டி மோதல். 15 பேர் கைது.

வாழைச்சேனையில் கோஸ்டி மோதல்.
பொலிஸ் வாகனம் கல் வீச்சில் சேதம் : 15 பேர் கைது இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனைப் பிரதேச, கருங்காலிச்சோலை, பேத்தாழையில் இரு கோஸ்டிகளுக்கிடையே இடம்பெற்ற மோதல் காரணமாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் விரைந்து செயற்பட்டதன் காரணமாக உயிர்ச்சேதம் எதுவுமின்றி பொது மக்கள் காப்பாற்றப்பட்டதாகவும் கல்குடாப் பொலிசார் தெரிவித்தனர்.
கருங்காலிச்சோலை ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய நிர்வாகம் தொடர்பாக இரு சாராருக்கிடையே நீண்ட காலமாக நிலவி வந்த முறுகல் நிலை நேற்றிரவு (திங்கள் இரவு) குழு மோதலாக மாறியதையடுத்து, காயமடைந்த இருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த சில மாதங்களாக முறுகல் நிலையேற்பட்டு வந்ததுடன், அவ்வப்போது அசம்பாவிதங்களும் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவம் இடம்பெற்ற வேளை பொலிசாரும் அங்கு வரவழைக்கபட்டனர்.
இதே வேளை, பொலிசாருக்கும் பொது மக்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை கைகலப்பாக மாறியது.
சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒரு சாராரின் வீடுகளுக்கு கல் வீச்சுத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது.
சிலர் கைது செய்யப்பட்டு பொலிஸ் வாகனத்தில் அழைத்துச்சென்ற வேளை, ஆத்திரமடைந்த நிலையில் பொலிஸ் வாகனத்திற்கு கல் வீச்சுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனால் வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்தது. பொலிசார் கலகத்தை அடக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இச்சம்பவத்தையடுத்து, கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விரைந்ததையடுத்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. ம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்குடாப் பொலிசார் தெரிவித்தனர்.