தமிழ் மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையைச் சிதைக்கமாட்டோம் – தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் ரில்வின் சில்வா உறுதி.

“வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்களும் எம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எமது தோழமையை ஏற்றுள்ளனர். அவர்களுக்கு நன்றி. நிச்சயம் அவர்களின் நம்பிக்கையைச் சிதைக்கமாட்டோம்.”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் ஜே.வி.பியின் செயலாளருமான ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“நாடாளுமன்றத் தேர்தலில் எமக்குக் கிடைக்கப் பெற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை விடவும் வடக்கில் இரண்டு தேர்தல் மாவட்டங்களையும் வென்று தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றது பெரும் பலமாகும். அந்த நம்பிக்கையை நிச்சயம் நாம் பாதுகாப்போம்.
நாம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை எதிர்பார்க்கவில்லை. எனினும், மக்கள் வழங்கிவிட்டனர். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல், மக்கள் வழங்கிய பொறுப்பை நிச்சயம் முறையாக நிறைவேற்றுவோம். மக்கள் வழங்கிய ஆணை மகிழ்ச்சியாக உள்ளது.” – என்றார்.