தேசியப் பட்டியல் எம்.பியாக யாரை நியமிப்பது? வவுனியாவில் இன்று கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு – அந்த ஆசனம் தனக்கு வேண்டும் என்று மாவை கடிதம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பி. விவகாரத்தைத் தீர்மானிப்பதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூடுகின்றது.

வவுனியாவில் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அரசியல் குழுவில் அங்கம் வகிக்கும் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ப.சத்தியலிங்கம், சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கி.துரைராஜசிங்கம், தவராசா கலையரசன், கவீந்திரன் கோடீஸ்வரன், சண்முகம் குகதாசன் மற்றும் குலநாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி, ஒரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையைப் பெற்றிருந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியலில் முதலாவது பெயராக மாவை சேனாதிராஜா குறிப்பிடப்பட்டுள்ளார். இந்நிலையில், தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தன்னை நியமிக்குமாறு கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கத்திடம், மாவை சேனாதிராஜா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிலரும் தமக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமை வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணும் வகையில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு இன்று கூடுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.