விஜித, லால்காந்த, நளீன், சுனில், வசந்த, சாவித்திரி உள்ளிட்ட அமைச்சரவை நாளை பதவியேற்கும்.
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை (18) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளது.
புதிய அரசாங்கத்தில் அமைச்சுக்களின் எண்ணிக்கை 23 அல்லது 25 ஆக மட்டுப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்ட அமைச்சுக்களுக்கு மாத்திரம் பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்களுக்குச் சொந்தமான விடயங்களின் எண்ணிக்கையின்படி சில அமைச்சுக்களுக்கு 2 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் 25 அல்லது 27 பிரதி அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாகவும் அறியமுடிகிறது.
கடந்த அரசாங்கங்கள் வழங்கிய இராஜாங்க அமைச்சு நியமனங்கள் இம்முறை வழங்கப்படாது எனவும் மொத்த அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 50 ஆக இருக்கும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை, ஆனால் ஜனாதிபதி அனுரகுமாரவின் கீழ் பாதுகாப்பு அமைச்சர் பதவி தொடர்ந்தும் இருக்கும். பிரதமர் பதவி ஹரிணி அமரசூரியவுக்கும், வெளிவிவகார அமைச்சர் பதவி விஜித ஹேரத்துக்கே வழங்கப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுவரை அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட நோக்கங்கள் வெவ்வேறு வழியில் உருவாக்கப்பட்ட போதும் , இம்முறை பல நோக்கங்களை உள்ளடக்கிய மற்றும் சில நோக்கங்களை ஒன்றிணைத்து சில புதிய அமைச்சுகள் உருவாக்கப்பட உள்ளன.
நளிந்த ஜயதிஸ்ஸ, லால் காந்த குரகம, நளின் ஹேவகே, சுனில் ஹந்துன்நெத்தி, நிஹால் கலப்பட்டி, நாமல் கருணாரத்ன, வசந்த சமரசிங்க, சமந்த வித்யாரத்ன, சரோஜா சாவித்திரி பால்ராஜ் ஆகியோருக்கு அமைச்சரவையின் பிரதான பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதுடன், அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சரவை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகல அமைச்சரவை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன், இந்த புதிய அமைச்சரவையின் அங்குரார்ப்பண கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் பாராளுமன்ற அமர்வுக்கு முன்னர் நடைபெறவுள்ளது.