நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி – இது ஒரு சரித்திர சாதனை என ராஜ்நாத் சிங் பாராட்டு

ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றியடைந்த நிலையில், இது ஒரு சரித்திர சாதனை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.

நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஹைப்பர்சானிக் ஏவுகணையை இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ., அமைப்பு நேற்று ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்தது. டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ மேம்பாட்டு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, நெடுந்தொலைவு சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகளை வடிவமைத்து சோதித்து வருகின்றது. நீண்ட தூர ஹைப்பர்சானிக் ஏவுகணையின் விமான சோதனை, ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை டிஆர்டிஓ மற்றும் ஆயுதப்படையின் மூத்த விஞ்ஞானிகள் முன்னிலையில் விமான சோதனை வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது.

இதுகுறித்து, சமூகவலைதளத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பதாவது, நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஹைப்பர்சானிக் ஏவுகணையை இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ., அமைப்பு, ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் வைத்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. நீண்ட தூர ஹைப்பர்சானிக் ஏவுகணையை வெற்றிகரமாக பறக்கவிட்டு இந்தியா ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. சரித்திர சாதனை படைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது ஒரு வரலாற்று தருணம். நமது ஆயுதப் படைகள், தொழில்துறை அபார சாதனைக்காக வாழ்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற முக்கியமான தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் திறன் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் குழுவில் தற்போது இந்தியாவும் சேர்ந்துள்ளது என்றார்.

Leave A Reply

Your email address will not be published.