இந்திய ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர் சேவை எண் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர் சேவை எண் மூலம் மிரட்டல் விடுத்த நபரை மும்பை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமைச் செயல் அதிகாரி என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு மும்பையில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இந்தியாவில் நடத்தப்பட்ட மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

நேற்று காலை 11 மணிக்கு ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அழைப்பு வந்த நிலையில், ரிசர்வ் வங்கியை வெடிகுண்டு மூலம் தகர்க்கப் போவதாக மிரட்டியுள்ளார்.

அவர் தன்னை தடை செய்யப்பட்ட ஒரு குழுவின் தலைமைச் செயல் அதிகாரி என்று அடையாளப்படுத்திக் கொண்டதாகவும், மிரட்டல் விடுப்பதற்கு முன்பு அந்த நபர் ஒரு பாடல் பாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மும்பை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.