விசா முடிந்தும் சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியுள்ளோர் 500க்கும் அதிகம்!

விசா காலம் முடிந்தும் சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 900 பேர் கைது செய்யப்பட்டனர். அதாவது ஆண்டுக்கு சராசரியாக 450 பேர்.

இருப்பினும் சிங்கப்பூரில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியுள்ள 500 முதல் 600 வெளிநாட்டவர்கள் அதிகாரிகளிடம் இன்னும் சிக்காமல் உள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சில்வியா லிம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் எழுத்துபூர்வமாக நவம்பர் 11ஆம் தேதி இந்த தகவல்களை வெளியிட்டார்.

சிங்கப்பூருக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களில் ஆண்டுக்கு 0.001க்கும் குறைவானவர்களே விசா முடிந்தும் சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்கும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை குடிநுழைவுத் தரவுகள் மூலம் திரட்டப்பட்டிருக்கலாம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறுகிறது.

சிலர் தங்களது விசா காலம் முடிந்தது தெரியாமல் சிங்கப்பூரில் தங்கியிருக்கலாம். அதேநேரம், சிலர் விசா முடிந்தது தெரிந்தும் வேலை வாய்ப்புகளுக்காகச் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் பதுங்கியுள்ளனர் என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

விசா காலம் முடிந்த அனைவரையும் உடனடியாக கைது செய்வது எளிதானது அல்ல. சிலர் அவர்களது கைப்பேசி எண்கள், தங்குமிடம் குறித்த தகவல்களை மாற்றிவிடுவார்கள். அதனால் அவர்களை அடையாளம் காண்பது சற்று சிரமம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 270 பேர் நீண்ட அல்லது குறுகிய விசா காலம் முடிந்தும் சிங்கப்பூரில் தங்கியவர்கள்.

குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் தரவுகளின்படி 2023ஆம் ஆண்டு விசா முடிந்தும் தங்கியதற்காக 542 பேர் கைது செய்யப்பட்டனர். 2022ஆம் ஆண்டு 357 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேநேரம் 2018ஆம் ஆண்டு 940 பேரும், 2019ஆம் ஆண்டு 804 பேரும் விசா முடிந்தும் தங்கியதற்காக கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூரில் விசா முடிந்து 90க்கும் அதிகமான நாள்கள் தங்கியிருந்தால் அவர்களுக்கு 6 மாதம் வரையிலான சிறைத்தண்டனை, குறைந்தது 3 பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

Leave A Reply

Your email address will not be published.