கொழும்பிலுள்ள அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பிசிஆர் பரிசோதனை.
கொழும்பிலுள்ள அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று (14) PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.சிறைச்சாலை வைத்தியசாலைகளில் இவை முன்னெடுக்கப்படவுள்ளன.
கொழும்பு மெகசின், விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை தலைமையகத்தின் அதிகாரிகளுக்கு இன்று PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான சுகாதார ஒழுங்கு விதிகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வர்த்தமானியில் வௌியிடப்படும் ஒழுங்கு விதிகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார எச்சரித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதிகளில், சட்டத்தைமீறிச்செயற்பட்ட 135 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 37 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களின் விபரங்களை பதிவு செய்யுமாறு பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் விபரங்களை சேகரித்து பதிவு செய்து கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரில் கடந்த 6 ஆம் திகதி முதல் நேற்றுவரை
2 ஆயிரத்து 884 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கொழும்பு மாநகர சபையின் பிரதாக வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.