கற்கோவளம் இராணுவ முகாமை உடனடியாக அகற்றுமாறு உத்தரவு – உரிமையாளர்களிடம் காணியை ஒப்படைக்குமாறு பணிப்பு.
பருத்தித்துறை, கற்கோவளம் இராணுவ முகாமை 14 நாட்களுக்குள் அகற்றி காணியை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு இராணுவத் தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
மூவருக்குச் சொந்தமான 3 ஏக்கர் காணியையே விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்று திங்கட்கிழமை மாலையில் இருந்து முகாமை அகற்றும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கற்கோவளம் கடற்கரையுடன் அண்டிய பகுதியில் அமைந்துள்ள இந்தக் காணி மூன்று சகோதரர்களுக்குச் சொந்தமானது.
இந்தக் காணியை இரண்டு தடவைகள் இராணுவ முகாமுக்காகச் சுவீகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் மற்றும் சிவாஜிலிங்கம் அணியினர் காணி உரிமையாளர்களுடன் இணைந்து போராடி அளவீட்டுப் பணியைத் தடுத்து நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.