இரு தமிழர்களுக்கு அமைச்சர் பதவி : இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி.

இலங்கையின் பிரதமராக ஹரிணி அமரசூரியா மீண்டும் திங்கட்கிழமை (நவம்பர் 18) பதவியேற்றுள்ளார்.
இலங்கையின் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு வியாழக்கிழமை (நவம்பர் 14) நடைபெற்ற பொதுத் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவின் இடதுசாரிக் கூட்டணி 159 இடங்களைப் கைப்பற்றியதை அடுத்து, தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்க அமைச்சரவை திங்கட்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றது.
மூத்த சட்ட வல்லுநர் விஜித ஹேரத் மீண்டும் வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை மேம்பாடு ஆகிய அமைச்சுகளுக்கும் இவர் பொறுப்பேற்றுள்ளார்.
புதிய நிதியமைச்சர் நியமிக்கப்படாத நிலையில், ஜனாதிபதி அநுரகுமாரவே அப்பொறுப்பை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இரு தமிழர்களும் புதிய அமைச்சரவையில் பதவியேற்றுள்ளனர்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜும், கடல்தொழில் மற்றும் நீரியல்வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகரும் பொறுப்பேற்றுள்ளனர்.
பல காலமாக குடும்பக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்திய ஒரு நாட்டில் அரசியலில் முக்கியத்துவம் பெறாதவராக இருந்த அநுரகுமார, செப்டம்பரில் ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
பொதுத் தேர்தலில் அவரது கூட்டணிக்குக் கிடைத்துள்ள பெரும்பான்மை ஆதரவு, வறுமைக்கும் ஊழலுக்கும் எதிரான போராட்டத்துக்கான அவரது திட்டங்களை நிறைவேற்றத் தேவையான அதிகாரத்தை அவருக்கு வழங்கியுள்ளது.
கிட்டத்தட்ட 22 மில்லியன் மக்கள் வசிக்கும் இலங்கை, கடுமையான அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் 2022ல் பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டது. அந்நாட்டின் பொருளியல் 2022ல் 7.3% ஆகவும் கடந்த ஆண்டு 2.3% ஆகவும் சுருங்கியது.
வலுவான ஆதரவு நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை வலுப்படுத்தும் அதே வேளையில், நாட்டை பொருளியல் நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் அனைத்துலக நாணய நிதியத்தின் (IMF) மீட்புத் திட்டத்தின் விதிமுறைகளை மாற்றியமைக்க அநுரகுமார வாக்குறுதிகள் அளித்துள்ளார். இதன் காரணமாக பொருளியல் நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.