ஐயப்பன் கோயிலில் முதியோர், குழந்தைகளுக்குத் தனிப்பாதை.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியோர், குழந்தைகளுக்குச் சிறப்புப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சிரமமின்றி விரைவாக தரிசனம் செய்ய முடியும்.
இதன்படி இவர்கள் 18ஆம் படி ஏறியவுடன் மேல் தள இரும்புப் பாலம் வழியாக சுற்றுப்பாதையில் செல்லாமல் நேரிடையாக தரிசனத்துக்குச் செல்லலாம். இவர்களுடன் உதவிக்கு கூடுதலாக ஒருவர் செல்லலாம். இந்த வசதியினால் முதியவர்களும் குழந்தைகளும் சிரமமின்றி குறைவான நேரத்தில் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 15ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. இணையம் மூலம் அதிகபட்சமாக 70,000 பேரும் நேரடி பதிவு மூலம் 10,000 பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
படிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக ஏறவும், முதியோர், குழந்தைகளைம் கை தூக்கி விடுவதற்கும் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த காலங்களில் 18ஆம் படிகளில் ஏற்பட்ட நெரிசல் தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது.
“பொதுவாக கூட்டம் இல்லாத நேரங்களில் 18ஆம் படி ஏறி வரும் பக்தர்கள் கொடிமரத்தை வணங்கி நேரடியாக மூலஸ்தானம் முன்பு செல்லலாம். தற்போது நெரிசல் அதிகரித்துள்ளதால் முதியோர், குழந்தைகள் மட்டும் இப்பாதையில் அனுமதிக்கப்படுகின்றனர். மற்ற பக்தர்கள் இரும்பு மேம்பாலம் வழியே சன்னிதானத்தின் பின்பகுதி, பக்கவாட்டு பகுதிகளின் வழியே சென்று மீண்டும் மூலஸ்தான பாதை மூலம் தரிசனம் செய்யலாம்,” என்று ஆலய நிர்வாகத் (தேவசம்போர்டு) தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறியுள்ளார்.