நாடுகடத்துவதற்கு ராணுவத்தைப் பயன்படுத்த டிரம்ப் திட்டம்
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப், தேசிய நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தவும் ஆவணப்பதிவில்லாத கள்ளக் குடியேறிகளைப் பேரளவில் நாடுகடத்தும் தமது திட்டங்களில் உதவ அமெரிக்க ராணுவத்தை ஏதேனும் ஒரு வகையில் பயன்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாக நவம்பர் 18ஆம் தேதி தெரிவித்தார்.
தமது ‘டுரூத் சோஷல்’ சமூக ஊடகத்தளத்தில் திரு டிரம்ப் இதனை உறுதிப்படுத்தினார்.
கள்ளக் குடியேறிகள் விவகாரத்தை, தேசிய நெருக்கடி நிலை அறிவித்துப் பேரளவிலான நாடுகடத்தல் திட்டத்தின் வாயிலாகக் கையாள ராணுவத்தை திரு டிரம்ப்பின் நிர்வாகம் பயன்படுத்தும் என்று அதே தளத்தில் நவம்பர் மாத முற்பாதியில் பதிவுசெய்திருந்தார் ‘ஜுடிஷல் வாட்ச்’ எனும் கன்சர்வேட்டிவ் குழுவை நிர்வகிக்கும் டாம் ஃபிட்டன்.
இதையடுத்து, திரு ஃபிட்டனின் பதிவை மீண்டும் பதிவேற்றம் செய்து ‘உண்மை’ என்று பதிவிட்டிருந்தார் திரு டிரம்ப்.
தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேசிய அவசரநிலையைப் பிரகடனப்படுத்தும் வெகுவான அதிகாரத்தை அதிபர்களுக்கு காங்கிரஸ் வழங்கியுள்ளது. உதாரணமாக, அதிபராகத் தமது முதல் தவணைக்காலத்தில் காங்கிரஸ் அனுமதித்ததற்கும் அதிகமாக, எல்லைச் சுவர் ஒன்றின் மீது செலவழிக்க திரு டிரம்ப் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.
குடியேறிகளின் வழக்குகள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி அவர்கள் மற்ற நாடுகளுக்கு விமானம்வழி அழைத்துச்செல்லப்படும்வரை தற்காலிக நிலையங்களாக இயங்கும் பெரும் தடுப்பு வசதிகளைக் கட்ட ராணுவ நிதிகள் பயன்படுத்தப்படும். இதை திரு டிரம்ப்பின் குடியேறிக் கொள்கை உயர்மட்ட ஆலோசகர் ஸ்டீவன் மில்லர் முன்னதாகக் கூறியிருந்தார்.
உள்துறைப் பாதுகாப்புப் பிரிவு இந்த வசதிகளை நிர்வகிக்கும் என்றார் அவர்.
நாடுகடத்தப்படுவதை எதிர்க்கும் கள்ளக் குடியேறிகளின் மனதை மாற்றும் வகையில் இந்தத் தடுப்பு முகாம்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக அமையலாம் என்று டிரம்ப்பின் குழு நம்புகிறது. அமெரிக்காவில் தொடர்ந்து இருப்பதற்காகத் தடுப்பு முகாம்களில் அடைப்பட்டு இருக்கும் நீண்டகால முயற்சியைக் காட்டிலும் நாடுகடத்தப்படுவதை ஏற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.