கோழிச் சோறு சாப்பிட்ட இளம் வீராங்கனை திடீர் மரணம்
ரயிலில் கோழிச் சோறு (சிக்கன் ரைஸ்) சாப்பிட்ட இளம் வீராங்கனை திடீரென உடல்நலம் குன்றி, உயிரிழந்தது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த ராபின் டென்னிஸ் என்பவரது மகளான எலினா லாரெட் (15 வயது), 10ஆம் வகுப்பு படித்து வந்தார். திறமைவாய்ந்த கூடைப்பந்து வீராங்கனையான இவர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த போட்டிகளில் கடந்த 8 முதல் 15ஆம் தேதி வரை பங்கேற்றார் எலினா. போட்டி முடிவடைந்த பின்னர், கடந்த 16ஆம் தேதி அவர் தன் குழுவுடன் ரயிலில் சென்னை திரும்பினார்.
அப்போது மற்ற மாணவிகளுடன் சேர்ந்து எலினாவும் கோழிச் சோறு, பர்கர் ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டதாகத் தெரிகிறது. சிறிது நேரத்தில் அவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட, வாந்தியும் எடுத்துள்ளார். பின்னர் மயக்கமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை சென்றடைந்ததும் அங்குள்ள தன் உறவினரிடம் நடந்ததை விவரித்த எலினா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின் பெரவல்லூர் பகுதியில் உள்ள மற்றொரு உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்தார் எலினா. ஆனால், உறவினர் வீட்டில் எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டு, இறுதியில் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் எலினா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மாணவி ரயிலில் சாப்பிட்ட உணவால் உயிர் இழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது.