மன்னார் வைத்தியசாலையில் தாய், சேய் மரணம் : வைத்தியசாலையை சுற்றி பதட்ட நிலை (Photos)
மன்னார் வைத்தியசாலையில் மகப்பேற்றுக்கு அனுமதிக்கப் பட்டிருந்த மன்னார் பட்டித்தோட்டப் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணான வனஜா ஜெகன், குழந்தை பிரசவித்த நிலையில்,நேற்றைய தினம் (19) செவ்வாய்க்கிழமை மரணமடைந்ததோடு, அவரது குழந்தையும் மரணித்ததன் எதிரொலியாக நேற்று முதல் அங்கு பதட்ட நிலை ஆரம்பித்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது மன்னர் வைத்தியசாலையை பெரும் திரளான மக்கள் எதிர்ப்பு கோஷங்களோடு சுற்றி வளைத்துள்ளார்கள்.
பிரசவத்திற்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் மரணமானதை தொடர்ந்து மக்கள் மன்னார் வைத்தியசாலை நிர்வாகத்தின் மீதும், மன்னார் சுகாதார பணியாளர்கள் மீதும் கொண்ட கோபத்தினால் அவர்களுக்கு எதிராக வீதிகளை மறித்து , வைத்தியசாலை பகுதியை ஆக்கிரமித்து நீதி வேண்டி நிற்கிறார்கள்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அரசு அதிபர், அங்குள்ள வைத்திய அதிகாரிகளோடும் , பணியாளர்களோடும் வைத்தியசாலைக்கு உள்ளே பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்.
மக்கள் கோஷங்களை போடுவதோடு, வைத்தியசாலையை நோக்கி கற்களை எறிவதாகவும் , பதட்டத்தைக் கட்டுப்படுத்த, பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டு உள்ளதாகவும், அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த , கண்ணீர் புகை குண்டுகளை வீசக்கூடிய ஒரு நிலை ஏற்படலாம் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
அங்கு போராட்டத்திற்கு வந்திருந்த சிலர் நீதி கிடைக்காவிட்டால் தங்களை எரித்துக் கொள்ளப் போவதாக , தங்கள் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொள்ள முயன்ற போது , அது மக்களால் தடுக்கப்பட்டுள்ளது.
பிரசவத்திற்காக வந்த பெண்ணினதும் , குழந்தைனதும் இறப்பு காரணமான வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசாத் ஹனிபாவை உடனடியாக அங்கிருந்து மாற்றுமாறு மக்கள் தொடர்ந்து கோசமிட்டு வருகின்றனர்.
அத்தோடு அங்குள்ள வைத்தியசாலை தொழிற்சங்கத்தையும் உடனடியாக கலைக்க வேண்டும் எனவும் , பிரசவ நேரத்தில் வைத்தியசாலையில் பணியில் இருந்த வைத்தியர்கள், தாதியினர் மற்றும் அங்கு பணிபுரிந்தவர்களை உடனடியாக கைது செய்து , தண்டிக்க வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்தவாறு கோஷமிட்டு வருகிறார்கள்.
அங்கு நிலை பதட்டமாகவே உள்ளது.