தாய், சிசு மரணத்துக்கு நீதி கோரி மன்னார் வைத்தியசாலைக்கு முன் மக்கள் பெரும் போராட்டம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மகப் பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரவு 8 மணியளவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

எனினும், இரண்டு அரசியல் கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளர்கள் இருவர் மக்களின் போராட்டத்தைத் தமது அரசியல் நாடகமாக வழிநடத்திச் சென்ற நிலையில் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

தாய் மற்றும் சிசுவின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும், தவறு செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும், வைத்தியசாலை நிர்வாகம் மாற்றப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டம் ஆரம்பமானது.

இதன்போது பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முற்பட்ட நிலையில் கலவரம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது .

இதன் காரணமாக கலகம் அடக்கும் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தந்த மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் இறந்த பெண்ணின் பெற்றோரிடம் கலந்துரையாடியபோதும் சுமுகமான நிலை ஏற்படவில்லை.

போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் கொட்டும் மழையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் முன் வீதியையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மன்னார் மாவட்ட அரச அதிபர் தலைமையில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பிரதிநிதிகள் அடங்கலாக உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள், சட்டத்தரணிகள், மதத் தலைவர்களை உள்ளடக்கி விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடல் சுமார் 2 மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின்போது மேற்படி பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் உயிரிழக்கும் வரை அங்கு நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் தாயார் குறித்த குழுவினரிடம் தெரிவித்தார்.

மேலும், இம் மரணங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார்.

இதன்போது உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எழுத்து மூலம் வாக்குறுதி வழங்குமாறு குறித்த குழுவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்தநிலையில் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனது விசாரணைக் குழுவை நியமித்து மூன்று நாட்களில் தமது விசாரணையை முடிப்பதாகவும் வாக்குறுதி வழங்கினார்.

இந்த விடயங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட வைத்தியர்கள் உள்ளடங்கலாக அனைவருக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்கினார்.

இந்த எழுத்துமூல உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்டு உயிரிழந்த பெண்ணின் தாய் மற்றும் உறவினர்கள் அங்கிருந்து சென்றனர்.

எனினும், இரண்டு அரசியல் கட்சிகளின் முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளர்கள் குறித்த எழுத்துமூல உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்களைத் திசை திருப்பி தமது அரசியல் நாடகத்தை அரங்கேற்றினர்.

இதனால் அங்கு மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது. பொலிஸார், விசேட அதிரடிப் படை மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் இணைந்து வைத்தியசாலைக்கு முன் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பலவந்தமாக வெளியேற்றினர்.

இதனால் சில மணி நேரம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.