அமெரிக்க ஏவுகணைகளால் தாக்கிய உக்ரேனுக்கு பதிலடி தரப்படும்: ரஷ்யா சூளுரை.
ரஷ்யா, தனது வட்டாரத்துக்குள் அமெரிக்க ஏவுகணைகளால் முதல் முறையாக தாக்குதல் நடத்திய உக்ரேனுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், அணுவாயுதங்களை சுட்டிக்காட்டி மிரட்டல் விடுத்திருந்த வேளையில் உக்ரேனின் தாக்குதல் நடந்துள்ளது.
ரஷ்யா-உக்ரேன் போர் தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி 1,000 நாள் ஆகிறது.
இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், மேற்கத்திய நாடுகள் மோதலை ‘விரிவாக்க’ விரும்புவதை உக்ரேனின் இந்தத் தாக்குதல் காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
அத்தகைய ஆயுதங்களை அமெரிக்காவின் நேரடி தலையீடு இல்லாமல் பயன்படுத்த முடியாது என்றும் அமெரிக்காவின் செயல் போரில் நேரடியாக பங்கேற்பது போன்றது என்றும் ரஷ்யா தெரிவித்தது.
உக்ரேன் முதல் முறையாக நவம்பர் 19ஆம் தேதி அமெரிக்காவின் ‘ஏடிஏசிஎம்எஸ்’ (ATACMS) ஏவுகணைகளால் ரஷ்யாவின் உட்பகுதிகளை தாக்கியது.
அண்மைய அமெரிக்க தேர்தலில் தோல்வியடைந்த ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரும் அதிபருமான ஜோ பைடன், பதவி விலகுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஆயுதங்கங்களைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அனுமதி அளித்தார்.
பிரையான்ஸ்க் வட்டாரத்தில் ராணுவத் தளங்களை நோக்கி ஏவப்பட்ட ஆறு ஏவுகணைகளில் ஐந்து ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யப் படைகள் தெரிவித்தன. ஒரு ஏவுகணை தாக்கியதில் தீ மூண்டு ,உடனடியாக அணைக்கப்பட்டது. சேதமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என்று ரஷ்யத் தரப்பு கூறியது.
ரஷ்யாவுக்குள் 110 கிலோ மீட்டர் உள்ளே இருக்கும் ஆயுதக் கிடங்கை குறி வைத்துத் தாக்குதல் நடத்தியதாக உக்ரேன் தெரிவித்தது.
உக்ரேன் தனது ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்களை பகிரங்கமாகத் தெரிவிக்கவில்லை. ஆனால் உக்ரேனிய அரசாங்கத்தின் ஒரு தகவலும் ஓர் அமெரிக்க அதிகாரியும் அமெரிக்காவின் ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்தனர்.
எட்டு ஏவுகணைகளில் இரண்டை மட்டுமே ரஷ்யா இடைமறித்ததாகவும் வெடிமருந்து விநியோகம் செய்யும் இடத்தின்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.
உக்ரேனின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா தனது வசம் வைத்துள்ளது.
இதற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், டோனால்ட் டிரம்ப்புடன் உக்ரேன் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் எந்தவொரு பகுதியையும் விட்டுக்கொடுக்க அவர் சம்மதிக்க மாட்டார். அதோடு ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நேட்டோ அணியில் உக்ரேன் சேருவதை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்துவார் என்று கிரெம்ளின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டோனல்ட் டிரம்ப், உக்ரேன்-ரஷ்ய மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்போவதாக உறுதியளித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், மேற்கத்திய நாடுகள் மோதலை மேலும் தூண்டி விடுகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.