நாடாளுமன்ற அமர்வு டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரசின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்த பின்னர் அடுத்த அமர்வுக்காக சபை அமர்வை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
முன்னதாக பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வு இன்று வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது.
பத்தாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பில் ஜனாதிபதி பிரசுரித்த வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு அறிவித்தார்.
இதன் பின்னர் பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
சபாநாயகரின் உரையைத் தொடர்ந்து பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்குரிய அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்போது பிரதி சபாநாயகராக வைத்திய கலாநிதி மொஹமட் ரிஸ்வி சாலி ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
குழுக்களின் பிரதி தவிசாளர் பதவிக்குப் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமாலி வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய சபாநாயகருக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வாழ்த்துத் தெரிவித்தார்.
புதிய சபாநாயகருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் வாழ்த்துத் தெரிவித்தார்.
“நாடாளுமன்றத்தின் கௌரவம் மற்றும் சுயாதீனத்தை முழுமையாகப் பாதுகாப்பேன். சகல உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பேன். அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் அனைவரும் ஒன்றிணைந்து மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும்.” – என்று புதிய சபாநாயகர் கலாநிதி அசோக சபுமல் ரன்வல குறிப்பிட்டார்.
சபை முதல்வராக பிமல் ரத்நாயக்கவும், ஆளும் தரப்பின் பிரதம கொறடாவாக நளிந்த ஜயதிஸ்ஸவும் நியமிக்கப்பட்டனர்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டார்.
இதன்பின்னர் ஜனாதிபதி, அரசின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தார். உரை நிறைவடைந்ததும் அடுத்த அமர்வுக்காக நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஜனாதிபதி ஒத்திவைத்தார்.