மன்னார் சௌத்பார் கடலில் இன்று வெடிப்புச் சம்பவம்! – இரு மீனவர்கள் படுகாயம்.
மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சௌத்பார் கடற்பரப்பில் இன்று வியாழக்கிழமை மதியம் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் இருவர் கடலில் மிதந்து வந்ததாகக் கூறப்படும் பொதியைச் சோதனையிட்ட போது அந்தப் பொதி வெடித்ததில் அந்த இருவரும் படுகாயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
படுகாயமடைந்தவர்கள் மன்னார் பனங்கட்டு கொட்டு பகுதியைச் சேர்ந்த எஸ்.ரமேஷ் (வயது 37) மற்றும் ஏ.ஆரோக்கியநாதன் (வயது 37) எனத் தெரியவந்துள்ளது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படுகின்றனர்.
கடலில் மிதந்து வந்த பொதியை எடுத்து தாம் சோதனை செய்தபோது அந்தப் பொதி வெடித்துள்ளது என்று காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
எனினும், மன்னார் பிரதேசத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் சிலர் தடை செய்யப்பட்ட டைனமைட் வெடிபொருளைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்ற நிலையில் இந்த மீனவர்கள் இருவரும் டைனமைட் வெடிபொருளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டபோது வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.