ஆர்டர் செய்யாமல் வந்த பார்சலை பிரித்த பார்த்து 9 விரல்களை இழந்த பெண்!
ஆர்டர் செய்யாமல் வந்த பார்சலை பிரித்த பார்த்த பெண் தனது 9 விரல்களை இழந்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டில் வசித்து வருபவர் பசம்மா(35). ராணுவத்தில் பணியாற்றிய இவரது கணவர் 2018 ஆம் ஆண்டு இறந்து விட்ட நிலையில் தற்போது தனியாக வசித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டில் சசிகலா என்ற பெண் வசித்து வருகிறார். இவரின் கணவரும், ராணுவத்தில் பணியாற்றிய போது உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சசிகலா வெளியூர் சென்றிருந்த போது அவரது வீட்டிற்கு கூரியரில் பார்சல் ஒன்று வந்துள்ளது. டெலிவரி ஊழியர் போனில் தொடர்பு கொண்ட போது, நான் எந்த பொருளும் ஆர்டர் செய்யவில்லை என சசிகலா தெரிவித்துள்ளார்.
ஆனால் சசிகலாவின் முகவரிக்குதான் வந்துள்ளது. மேலும் அந்த பொருளுக்கு முன்னமே பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பக்கத்து வீட்டில் வசிக்கும் பசம்மாவை தொடர்பு கொண்ட சசிகலா தனக்கு வந்துள்ள பார்சலைப் பெற்றுக்கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.
மேலும் பார்சலை பிரித்து அதில் என்ன உள்ளது என பார்க்குமாறு கூறியுள்ளார். பார்சலை பிரித்து பார்த்த பொது அதில் ஹேர் டிரையர் ஒன்று இருந்துள்ளது. அது எப்படி செயல்படுகிறது என பயன்படுத்தி பார்க்க, சுவிட்ச் பிளக்கில் செருகி உபயோகித்து பார்த்தபோது, ஹேர் டிரையர் திடீரென வெடித்து சிதறியுள்ளது.
இதில் பசம்மாவின் 9 விரல்கள் துண்டாகியுள்ளது. மேலும் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பசம்மாவின் ரத்தம் வீடு முழுக்க தெரிந்துள்ளது. வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பசம்மாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆர்டர் செய்யாத நிலையில் வந்த பொருள் வெடித்தது எப்படி, பார்சலை அனுப்பியது யார் என காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.