மீண்டும் ஜார்க்கண்ட் முதல்வர் ஆகிறார் ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான இண்டியா கூட்டணி அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. ஜேஎம்எம் கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 13, 20-ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இண்டியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) 43, காங்கிரஸ் 30, ராஷ்டிரிய ஜனதா தளம் 7, இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்-எல்) 4 தொகுதிகளில் போட்டியிட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68, ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜன சக்தி 1 தொகுதிகளில் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இண்டியா கூட்டணியில் ஜேஎம்எம் 34, காங்கிரஸ் 16, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 4, இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்-எல்) 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஒட்டுமொத்தமாக இண்டியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 21, ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு 1, லோக் ஜன சக்தி 1, ஐக்கிய ஜனதா தளம் 1 தொகுதியில் வெற்றி பெற்றன. அந்த கூட்டணிக்கு 24 தொகுதிகள் கிடைத்துள்ளன. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு தற்போது 21 இடங்கள் மட்டுமே கிடைத்திருப்பது பின்னடைவாக அமைந்துள்ளது.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சம்பய் சோரன், சாராய்கேலா தொகுதியில் 20,447 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றி குறித்து ராஞ்சியில் செய்தியாளர்களிடம் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று கூறும்போது, ‘‘இண்டியா கூட்டணிக்கு வாக்களித்த ஜார்க்கண்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக, விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கு மனமார நன்றி கூறுகிறேன்’’ என்றார். முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹேமந்தின் மனைவி கல்பனா, காண்டே தொகுதியில் வெற்றி பெற்றார்.

அவர் கூறும்போது, ‘‘காண்டே தொகுதிமக்கள் என்னை மகளாக கருதுகின்றனர். அவர்களது வளர்ச்சிக்காக அயராது பாடுபடுவேன்’’ என்றார். ஜார்க்கண்டில் இண்டியா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருப்பது குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: ஜேஎம்எம் தலைமையிலான இண்டியா கூட்டணி சார்பில் மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இது ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று ஜேஎம்எம் உறுதி அளித்தது.

தேர்தலுக்கு முன்பாக ஜார்க்கண்ட் அரசு சார்பில் மகளிருக்கான உதவித் தொகை ரூ.1,000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இது இண்டியா கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா 100-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம் செய்தார். ஆனால், அவருக்கு இணையாக பாஜகவில் பெண் தலைவர் இல்லை. ஊழல் வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டது அனுதாப அலையை ஏற்படுத்தியது. ஜார்க்கண்டில் வங்கதேச முஸ்லிம்கள் ஊடுருவி இருப்பதாக பிரச்சாரத்தில் பாஜக குற்றம் சாட்டியது. இதற்கு பதில் அளித்த ஜேஎம்எம் தலைவர்கள், ‘‘எல்லை பாதுகாப்பு மத்திய அரசின் வசம் உள்ளது. ஊடுருவலை தடுக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு’’ என்றனர். இவையெல்லாம் இண்டியா கூட்டணியின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.