உக்கிரமாகும் உக்ரைன் போர் : சுவிசிலிருந்து சண் தவராஜா
உக்ரைன் அரசின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவந்த தொலைதூர ஏவுகணைகளை ரஸ்ய நாட்டினுள் பாவிப்பதற்கான அனுமதியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நியூயோர்க் ரைம்ஸ் உள்ளிட்ட ஒருசில ஊடகங்கள் தம்மை இனங்காட்ட விரும்பாத பாதுகாப்புத் துறை அதிகாரிகளை ஆதாரமாகக் காட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தன. அமெரிக்க அரசாங்கத்தினால் இந்தச் செய்தி உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத போதிலும் பைடனின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அறிக்கைகள் மேற்குலகின் பல தரப்பினரிடம் இருந்தும் வெளியாகி உள்ளதைப் பார்க்க முடிகின்றது.
மறுபுறம், இதே போன்ற முடிவை ஏற்கனவே உக்ரைனுக்கு தொலைதூர ஏவுகணைகளை வழங்கியுள்ள பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் எடுத்துள்ளதாக பிரான்ஸ் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், செய்தி வெளிவந்த ஓரிரு மணித்தியாலங்களில் அந்தச் செய்தி மீளப் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் அத்தகைய முடிவு எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தொலைதூர ஏவுகணைகளைப் பாவிப்பது தொடர்பில் உக்ரைனுக்கு அனுமதி வழங்கும் மேற்குலகின் முடிவு தொடர்பில் தனது வன்மையான கண்டனங்களை ஏற்கனவே பதிவு செய்திருந்த ரஸ்யா, தனது அணுவாயுதக் கொள்கையை மறு பரிசீலனை செய்துள்ளது. ரஸ்யாவைப் பொறுத்தவரை அமெரிக்கத் தயாரிப்பு தொலைதூர ஏவுகணைகளைப் பாவிக்கும் தொழில்நுட்பம் தெரிந்த வல்லுநர்கள் உக்ரைனில் இல்லை. எனவே அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்களே அவற்றை இயக்க வேண்டும். இந்நிலையில் போரில் அமெரிக்கா நேரில் சம்பந்தப்படுகின்றது. மூன்றாம் நாடொன்று, அதுவும் அணுவாயுத வல்லரசு ஒன்று தனக்கு எதிரான போரில் நேரடியாகச் சம்பந்தப்படும் பொழுது அதற்கு எதிராக தன்னைக் காத்துக் கொள்ள, இறுதித் தேர்வாக அணுவாயுதங்களைப் பாவிக்கலாம் என ரஸ்யா வாதத்தை முன்வைக்கிறது.
இந்நிலையில் ரஸ்ய உக்ரைன் எல்லைப் பிராந்தியமான பிரியன்ஸை இலக்குவைத்து ATACMS ரக அமெரிக்கத் தயாரிப்பு ஏவுகணைகளை உக்ரைன் வீசியுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. செவ்வாய்க்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின்போது ஆறு எறிகணைகள் வீசப்பட்டதாகவும் அவற்றுள் ஐந்து எறிகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், ஒரு எறிகணை சேதமாக்கப்பட்டதாகவும் ரஸ்யா கூறியுள்ளது. இதன்போது ஒரு படைத்தளத்துக்கு சிறிய சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியத் தயாரிப்பான Storm Shadows ரக தொலைதூர ஏவுகணைகளை புதன்கிழமை உக்ரைன் பாவித்துத் தாக்குதல்களை நடத்தியதாக புளும்பேர்க் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ரஸ்யாவின் குர்ஸ்க் மற்றும் கிராஸ்நோடார் ஆகிய பிராந்தியங்களை இலக்கு வைத்து 12 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த ஏவுகணைகள் ரஸ்ய விமான எதிர்ப்புத் தொழில்நுட்பத்தால் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட ரஸ்ய நிலப்பரப்பினுள் தொலைதூர ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவது மோதலில் நேரடியாக நேட்டோ நாடுகள் தலையிடுவதற்கு ஒப்பானது. எனவே அதற்கேற்ற பதிலடி வழங்கப்படும் என ரஸ்ய அதிபர் புட்டின் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. தற்போதைய நிலையில் உக்ரைன் போர் உலகளாவிய போராக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ள புட்டின், அதற்கேற்ற பதிலடியைத் தனது நாடு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், வியாழக்கிழமை ரஸ்யா நடத்திய தாக்குதலில் முதல் தடவையாகக் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. உக்ரைனின்; டினீப்பர் பகுதியில் உள்ள இராணுவ உற்பத்தித் தளத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது ‘Oresshnik’ (Hazel) என்ற பெயரிலான ஹைப்பர்சொனிக் ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இன்னும் இரண்டு மாதங்களில் பதவியை இழக்க உள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டுவந்த தொலைதூர ஏவுகணைகளைப் பாவிப்பதற்கான அனுமதியை தற்போது உக்ரைனுக்கு வழங்கியது எதனால் என்ற கேள்வி எழுகிறது. அதுவும், புதிய அதிபராகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தான் பதவிக்கு வந்ததும் 24 மணி நேரத்தில் உக்ரைன் போர் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில் அவருக்குச் சங்கடத்தை உருவாக்குவது போன்று ஜோ பைடன் செயல்பட்டுள்ளார். அது மாத்திரமன்றி ட்ரம்புக்கு ஆதரவாக பெருவாரியாக வாக்களித்த மக்களின் கருத்தை உதாசீனம் செய்வது போலவும் உள்ளது. போர்கள் வேண்டாம் எனக் கூறும் ட்ரம்பை மக்கள் தமது ஜனாதிபதியாகத் தெரிவு செய்திருக்க, போர்களைத் தொடரும் சிந்தனை கொண்ட ஐனநாயகக் கட்சி வேட்பாளர் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் விருப்புக்கு மாறாகச் செயற்படும் முடிவில் எந்தவகை நியாயம் இருக்க முடியும்?
தவிர, உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் மேலும் விரிவடையும் நிலையில் அது மூன்றாம் உலகப் போராக வெடிக்கும் சாத்தியம் உள்ளதாகப் பல தரப்பிலும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுவரும் நிலையில் அது பற்றிய எந்தவிதக் கவலையும் இல்லாமல் ஜோ பைடன் எடுத்துள்ள முடிவு அவரின் புத்திக்கூர்மையைக் கேள்விக்கு உட்படுத்துவதாகவும் உள்ளது.
தொலைதூர ஏவகணைகள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை மேற்குலகம் மறுபரிசீலனை செய்யும் முடிவு ஏற்கனவே அமெரிக்கத் தலைமையினால் எடுக்கப்பட்ட ஒன்று என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றிருந்தால் இந்த முடிவு பகிரங்கமாகவே அறிவிக்கப்பட்டிருக்கும். ஜோ பைடனின் அரசியல் வாரிசு தோற்றுப்போன நிலையில் இரகசியமாக இந்த முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது என்பது அவர்களது ஊகம்.
மேற்குலகின் இந்த முடிவுக்கு அடிப்படையாக ரஸ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் வட கொரியப் படையினர் ரஸ்யப் படைகளோடு இணைந்து உக்ரைனுக்கு எதிராகப் போரிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. சற்றொப்ப 12,000 வட கொரியப் படையினர் ரஸ்யாவில் நிலை கொண்டுள்ளதாகவும், அவர்கள் ரஸ்யாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ள நிலையில் அது வெளிநாட்டுப் படையினரின் தலையீடாகக் கருதப்படுவதால் தாமும் நேரடியாகத் தலையிடுவதற்கு ஒரு நியாயம் கிடைக்கிறது என்பது மேற்குலகின் வாதம்.
ரஸ்யாவில் வட கொரியப் படையினர் உள்ளனர் என்பதற்கோ அவர்கள் உக்ரைனுக்கு எதிரான படை நடவடிக்கைகளில் பங்கு பெறுகிறார்கள் என்பதற்கோ இதுவரை எந்தவொரு அழுத்தமான ஆதாரமும் இல்லாத நிலையில் அந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன வலு உள்ளது என்பது புரியவில்லை. தனது இலக்கை அடைய ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தனது எதிரிகள் மீது சுமத்துவது அமெரிக்காவைப் பொறுத்தவரை புதிய விடயமல்ல. சதான் ஹு சைன் விடயத்திலேயே உலகம் அதனைப் பார்த்துவிட்டது.
உக்ரைன் போர் ஆயிரம் நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. அதற்கு டொனால்ட் ட்ரம்பின் பதவிக் காலத்தில் முடிவு எட்டப்படும் என உலகம் நம்பிக் கொண்டிருக்கையில் ஜோ பைடன் எடுத்துள்ள அதிரடி முடிவு நிலைமையை மேசமாக்குவதற்கே உதவும். இந்த வேளையில் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு புட்டினுக்கு உள்ளது. இதனை வேறுவழியில் சொல்வதானால் மூன்றாம் உலகப் போரைத் தள்ளிப் போடும் பொறுப்பு புட்டினின் கைகளில் உள்ளது எனலாம்.