இலண்டனில் உணர்வுபூர்வமாக நடந்த தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வு!
மாவீரர் வாரத்தை முன்னிட்டு தமிழீழத் தேசியக் கொடி நாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் ஆயிரக்கணக்கானோரின் பங்குபற்றுதலுடன் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமது நாடுகளில் தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வை அனுஷ்டித்து வருகின்றனர்.
இந்தத் தினத்தில் இறுதி யுத்தம் மற்றும் போர்க் காலத்தில் இலங்கையில் உயிர்த்த தமிழ் மக்களையும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
அதன் பிரகாரம் இம்முறையும் தமிழீழத் தேசியக் கொடி நாள் நிகழ்வு இலண்டனில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட தமிழ் மக்கள் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் நீதியான விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியதுடன், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி சர்வதேச தலையீட்டுடன் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரினர்.
இலங்கையில் அமையப் பெற்றுள்ள புதிய அரசுக்கு ஐ.நா., மேற்கத்திய நாடுகள் உட்பட மனித உரிமைகளை நேசிக்கும் அனைத்து நாடுகளும் தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, போரில் உயிர்நீத்த உறவுகள் மற்றும் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இவ்வாரம் முழுவதும் இலண்டனின் பல்வேறு பகுதிகளிலும், ஐரோப்பா, கனடா உட்பட பல புலம்பெயர் நாடுகளிலும் புலம்பெயர் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.