மகாராஷ்டிரா தேர்தல்: மும்பை தமிழ்செல்வன் ‘ஹாட்ரிக்’ வெற்றி.
மும்பைத் தமிழர்களால் ‘கேப்டன்’ என்று அழைக்கப்படும் ஆர் தமிழ்செல்வன் பாஜக வேட்பாளராக மூன்று முறை போட்டியிட்டு வென்றுள்ளார்.
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைப் பூா்வீகமாகக் கொண்ட தமிழ்செல்வன், 1980ஆம் ஆண்டு காலகட்டத்தில் வேலைக்காக மும்பைக்கு குடிபெயா்ந்தாா்.
மும்பை நகரின் சத்ரபதி சிவாஜி டொ்மினஸ் ரயில் நிலையத்தில் சரக்குப் பெட்டக ஒப்பந்ததாரராக வணிகத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்செல்வன், 2008ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்களை மீட்பதில் துணிச்சலுடன் செயல்பட்டவா்.
தன்னலமற்ற சேவையால் மும்பை மக்களிடையே பிரபலமடைந்த தமிழ்ச்செல்வன் ‘கேப்டன்’ என்று தமிழ் மக்களால் அழைக்கப்பட்டார்.
பாஜகவில் இணைந்த அவர், மும்பை மாநகராட்சி உறுப்பினராக வென்று தமது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
தமிழா்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியை உள்ளடக்கிய சியோன்-கோலிவாடா சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2014, 2019 ஆகிய சட்டப் பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டு வென்றார்.
இந்தத் தேர்தலிலும் அதே தொகுதியில் களமிறங்கிய தமிழ்செல்வன், 7,895 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். இது அவரது ‘ஹாட்ரிக்’ வெற்றி. இம்முறை அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது.
தமிழ்செல்வனை எதிா்த்துப் போட்டியிட்டு 65,534 வாக்குகளுடன் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் வேட்பாளா் கணேஷ் குமாரும் தமிழகத்தைப் பூா்வீகமாகக் கொண்டவா்தான்.
இந்த இருவரும் கடந்த தோ்தலிலும் எதிரெதிராகப் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.