தெரு முழுவதும் ரத்த ஆறு ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சி!
தெருவில் முழுவதும் ரத்த ஆறு ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா தொழிற்பேட்டை அருகே வெங்கடாத்ரி நகர் உள்ளது. அப்பகுதியில் திடீரென தெரு முழுவதும் ரத்த ஆறு ஓட தொடங்கியது. ஒரு மேன்ஹோலில் இருந்து திரவம் வெளியேறி, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து,
அவை இரத்தத்தில் மூழ்கியது போல் தெரிகிறது.திரவத்தின் துர்நாற்றம் காரணமாக குடியிருப்பாளர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. என்ன ஆனது என்று தெரியாமல் இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள், நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
என்ன நடந்தது?
இந்த தகவலறிந்து அங்கு வந்த அதிகாரிகள், இது ரத்தம் இல்லை என்று உறுதிப்படுத்தினர். இது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சிவப்பு நிற ரசாயனம் என்று தெரிவித்தனர். இதனிடையே சாலையில் ரத்த ஆறு ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளப்பக்கத்தில் வைரலாக பரவியது.
இதனையடுத்து உண்மையை அறிந்த அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இத்தகைய ரசாயனக் கழிவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் தெலுங்கானா மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்து, தொழிற்சாலைகள் ரசாயனங்கள் வெளியேற்றப்படுவதை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.