திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 851 பேர் பாதிப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 1,708 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 65 குடும்பங்களைச் சேர்ந்த 182 உறுப்பினர்கள் பாதுகாப்பு மையங்களிலும், 532 குடும்பங்களைச் சேர்ந்த 1621 பேர் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திருகோணமலை மாவட்டத்தில் இன்று புதன்கிழமை காலை பெறப்பட்ட புள்ளிவிபரத் தகவலின்படி சேருவில பிரதேச செயலகப் பிரிவில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும், மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் 938 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 574 பேரும், தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 301 பேரும், மொரவெவ பிரதேச செயலகப் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேரும், பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 193 குடும்பங்களைச் சேர்ந்த 673 பேரும், கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் 403 குடும்பங்களைச் சேர்ந்த 1,084 பேரும், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, 6 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 34 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் சண்பகவல்லி வித்தியாலயத்திலும், தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 9 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேர் சித்திவிநாயகர் வித்தியாலயத்திலும், பட்டணமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 22 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேர் பாரதிபுரம் பாடசாலையிலும், முத்துநகர் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்திலும் தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.