தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் இலங்கை அணி 42 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
2023- 2025 WTC போட்டிகள் கடைசி சுற்றில் இருக்கின்றன. எப்போதும் இல்லாத வகையில் “இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா” முதலிய 5 அணிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்று முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், தற்போது இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கனவை நோக்கி விளையாடிய இலங்கை அணி, 191 ரன்னுக்கு தென்னாப்பிரிக்காவை சுருட்டி சிறந்த தொடக்கத்தைப் பெற்றது.
என்னதான் 191 ரன்களுக்கு தென்னாப்பிரிக்காவை சுருட்டியிருந்தாலும், தன்னுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணிக்கு தென்னாப்பிரிக்கா பவுலர்கள் பதிலடி கொடுத்தனர்.
யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இலங்கை அணி 32 ரன்னுக்கே 5வது விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஆனால் தொடர்ந்து இலங்கையை எழவே விடாமல் விக்கெட் வேட்டை நடத்திய தென்னாப்பிரிக்கா 32 ரன்னிலேயே அடுத்தடுத்து 6வது, 7வது மற்றும் 8வது விக்கெட்டை வீழ்த்தி அசத்தியது. அதாவது 0 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இலங்கை அணி. அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்திய மார்கோ யான்சன், இலங்கை அணியை 42 ரன்னுக்கு ஆல் அவுட்டாக்கினார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை இரண்டு அணிகளுக்கும் WTC பைனலுக்கு செல்ல இது முக்கியமான போட்டியாகும். இலங்கைக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகள் (சொந்த மண்ணில்) மீதமுள்ளன.
அதேபோல தென்னாப்பிரிக்காவுக்கு இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் (சொந்த மண்ணில்), பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் (சொந்த மண்ணில்) என 4 போட்டிகள் மீதமுள்ளன.
இரண்டு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டும்.