மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு; 30 பேர் காயம்

மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ராவிலிருந்து கோண்டியா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பிந்த்ரவன தோலா கிராமத்துக்கு அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், 10 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்து கோண்டியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “ மகாராஷ்டிர மாநிலம் கோண்டியாவில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை உடனடியாக வழங்க போக்குவரத்து நிர்வாகத்துக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.