வவுனியா வைத்தியசாலையில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிரசவிப்பு!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் முதன் முறையாக ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.
பதவியாவைச் சேர்ந்த கரப்பவதி ஒருவர் நேற்று இரவு பிரசவ வலியுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்குச் சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் 4 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.
மேற்படி தாயார் மகப்பேற்று வைத்திய நிபுணர் காமினியால் தொடர்ச்சியாகப் பரிசோதிக்கப்பட்டு வந்துள்ளார். அவரது மகப்பேற்று வைத்திய விடுதியாகிய 7ஆம் விடுதியில் சேர்க்கப்பட்டு வைத்தியர் திலீபனால் சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு நான்கு குழந்தைகளும் பிரசவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிரசவிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
மேற்படி தாயாரும் குழந்தைகளும் நலமாகவுள்ளனர் என்றும், நான்கு குழந்தைகளும் சிறப்பு குழந்தை நலப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.