கனமழை காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கின.
சாலையைவிட தாழ்வாக உள்ளதால், தி.நகர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மழைநீர் தேங்கி, குளம்போல் மாறியது. கே.கே., நகரில் ராஜமன்னார் சாலை, ஆர்.கே., சண்முகம் சாலை, காமராஜர் சாலை; விருகம்பாக்கம், கோடம்பாக்கம், மேற்கு மாம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளை மூழ்கடித்து மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
கோயம்பேடு சந்தையிலும், மழைநீர் தேங்கியதால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் அவதிப்பட்டனர். அரும்பாக்கம், தேனாம்பேட்டை கே.பி.தாசன், தி.நகர், அசோக் நகர், கொரட்டூர், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்புகளிலும் மழைநீர் புகுந்தது.
பட்டாபிராம், தண்டுரை, ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள், கவரப்பாளையம் சாலைகளில் முழங்கால் மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம், பாண்டியன் சாலை மற்றும் கபாலீஸ்வரர் நகரில் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில், சாலை பள்ளமாக உள்ளது. அதில் வெள்ளம் தேங்கியதால், இ.சி.ஆரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை – கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் மழைநீர் சூழ்ந்ததால், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை உருவானது. மழைநீர் தேக்கத்தால், கனரக வாகன போக்குவரத்து மிகுந்த மாதவரம் ரவுண்டானா அருகே, இருபுறமும் வாகனங்கள் தத்தளித்து ஊர்ந்து சென்றன.
போரூர் – ஆற்காடு சாலை பரங்கிமலை – பூந்தமல்லி, செங்குன்றம் – திருவள்ளூர் கூட்டுச்சாலை சந்திப்பு, காவாங்கரை பகுதியில் ஜி.என்.டி., சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இங்கு, மழைநீர் கால்வாய் புதிதாக கட்டப்பட்ட நிலையில், தண்ணீர் அதிகளவு தேங்கியது.